இந்தியா

திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும்: ஆய்வாளர் வலியுறுத்தல்

DIN

திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றி இந்தியா தாராள மனதுடன் சிந்திக்க வேண்டும் என்று ஆய்வாளர் ஸ்மிதா சக்ரவர்த்தி வலியுறுத்தினார்.
இந்தியாவில் சிறைகளை மாற்றியமைக்கக் கோரி ஸ்மிதா சக்ரவர்த்தி பத்தாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வருகிறார். ஜெய்பூர் சாங்கானேர் பகுதியில் உள்ள திறந்தவெளி சிறை குறித்து அவர் கடந்த 2017-இல் அளித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அதைப் போன்ற சிறையை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
திறந்தவெளி சிறைகளை அமைப்பது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி ப்ரிஸன் எய்ட் பிளஸ் ஆக்ஷன் ரிசர்ச் என்ற அமைப்பை ஸ்மிதா சக்ரவர்த்தி நடத்தி வருகிறார். அவர் பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திறந்தவெளி சிறைகளை அமைப்பதற்கு உதவியுள்ளார். 
பிகாரில் சிறைகளின் நிலைமை தொடர்பாக அவர் ஓர் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது:
பிகாரில் உள்ள 58 சிறைகளுக்கும் நான் கடந்த 2014-இல் சென்றேன். அங்குள்ள ஒவ்வொரு கைதியிடமும் நான் பேசினேன். அப்போது சிறைளில் உள்ள கைதிகளில் சிலர் மட்டுமே தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்தேன். கைதிகளில் பலரும் எதேச்சையாக குற்றம் இழைத்தவர்கள்தான். சட்ட உதவிக்குச் செலவு செய்ய முடியாத காரணத்தாலேயே சில கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். கைதிகளில் பலரும் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு மறுவாழ்வுக்கான வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. 
பிகார் சிறைகளில் நான் ஆய்வு மேற்கொண்ட பிறகு ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ராஜஸ்தானில் சாங்கானேர் பகுதியில் உள்ள சிறை அமைப்பு என்னை வியப்படையச் செய்தது. 
கடந்த 1954-இல் உருவாக்கப்பட்ட சாங்கானேர் சிறையில் தற்போது 450 குற்றவாளிகள் தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வசிக்கின்றனர். அங்கு உயரமான சுவர்களோ இரும்புக் கம்பிகளோ இல்லை. கைதிகள் தங்குவதற்கு குடிசைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக வெளியே செல்ல வேண்டியுள்ளது. திறந்தவெளி சிறையில் யாரை வைத்திருப்பது என்பது குறித்து சிறைக் குழு முடிவெடுக்கிறது. 
திறந்தவெளி சிறைகளைவிட வழக்கமான சிறைகளில் இருந்து தப்பித்துச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை சிறை நிர்வாகங்கள் கவனித்துள்ளன.
மனிதாபிமானத்துடன் நடத்தினால் உயரமான மதில்களோ, இரும்புக் கம்பி வேலிகளோ இல்லாதபோதிலும் சிறைக் கைதிகள் தப்பிச் செல்ல மாட்டார்கள். குறைந்தபட்ச கட்டுப்பாடு என்பது ஒழுக்கத்தை மேம்படுத்துகிறது. திறந்தவெளி சிறைகளை அமைப்பது பற்றி இந்தியா தாராள மனதுடன் சிந்திக்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் அஜித் சிங் கூறியதாவது:
நாட்டில் உள்ள மற்ற சிறைகளைப் போலன்றி சாங்கானேரில் உள்ள திறந்தவெளி சிறை தனது கைதிகள் வேலைக்காக வெளியே செல்வதை அனுமதிக்கிறது. கைதிகள் சமூக வாழ்வை மேற்கொள்வதை சாங்கானேர் சிறை அமைப்பு உறுதிப்படுத்துகிறது. ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது ஒரு திறந்தவெளி சிறை உள்ளது. சாங்கானேரில் உள்ள திறந்தவெளி சிறையைவிட்டுச் செல்ல குற்றவாளிகள் மறுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT