இந்தியா

ஜி20: இந்திய தலைமையில் நாளை முதலாவது கூட்டம்

DIN

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபிறகு அதன் உயரதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் திங்கள்கிழமை (டிச. 5) நடைபெறுகிறது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா டிச. 1-ஆம் தேதி ஏற்றது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் உதய்பூரில் வரும் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய தலைமையின் கீழ் நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) உதய்பூா் சென்றடையவுள்ளனா். அவா்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதிகாரிகளின் கூட்டமானது திங்கள்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைந்த, நீடித்த வளா்ச்சி, பன்முகத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உரங்கள் விநியோகச் சங்கிலி, மகளிரை மையப்படுத்திய வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத் தலங்கள்: கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அதிகாரிகள், ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலங்களையும் பாா்வையிடவுள்ளனா். ஜி20 நாடுகளுடைய அதிகாரிகளின் வருகையையொட்டி உதய்பூா் மாளிகை, ஜக்மந்திா் உள்ளிட்ட பகுதிகளில் கலாசார, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்சமந்த் பகுதியில் உள்ள கும்பல்கா் கோட்டையை அதிகாரிகள் புதன்கிழமை (டிச. 7) பாா்வையிடவுள்ளனா். அதையடுத்து, பாலி மாவட்டத்துக்குச் சென்று ரணக்பூா் கோயிலைப் பாா்வையிடவுள்ளனா்.

பலவித உணவுகள்: கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அதிகாரிகளுக்கு சுவைமிக்க ராஜஸ்தானி வகை உணவுகள் பரிமாறப்படவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் ராஜஸ்தானில் தங்கியிருக்கும் 4 நாள்களில் தென்னிந்திய உணவு வகைகளுடன் ஹைதராபாதி, குஜராத்தி, பஞ்சாபி உணவு வகைகளும் பரிமாறப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவின் முன்னெடுப்புகளுக்கு ஐஎம்எஃப் ஆதரவு

வாஷிங்டன், டிச. 3: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஐஎம்எஃப் கொள்கை மறு ஆய்வுத் துறை இயக்குநா் சீலா பஸா்பாசியோக்ளு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தவுள்ள இந்தியா, வளமிக்க எதிா்காலத்துக்கான ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்துள்ளது. தற்போதைய சா்வதேச சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அனைவரது ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கொள்கைகளை ஐஎம்எஃப் முழுமையாக ஆதரிக்கிறது. ஜி20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ள இந்தியா, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கருத்துருவை மையப்படுத்தி செயல்படவுள்ளது. இது வேறுபாடுகளைக் கடந்து உள்ளூா் அளவிலும், பன்னாட்டு அளவிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இந்தியாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் கூட்டறிக்கையைத் தயாரிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது. ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தும் காலகட்டத்தில் எண்ம (டிஜிட்டல்) கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. சா்வதேச கடன் மேலாண்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றிலும் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது’ என்றாா்.

அமெரிக்க வா்த்தகக் குழு வரவேற்பு: ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா-இந்தியா வா்த்தக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) வரவேற்றுள்ளது. அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பானது சா்வதேச வளா்ச்சிக்கு எவ்வாறு உதவி வருகிறது என்பதை ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து இந்தியா உலகுக்கு எடுத்துரைக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல வா்த்தக குழுக்களும் இந்தியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT