இந்தியா

பாகிஸ்தான் ட்ரோன் வீசிய 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா பாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் மூலமாக வீசப்பட்ட 25 கிலோ ஹெராயின் எல்லைப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது.

இந்திய எல்லையில் அமைந்துள்ள சூரிவாலா சூஸ்டி கிராமப் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் வானில் வட்டமிடுவதை எல்லைப் பாதுகாப்பு படையினா் கண்டனா். ஆளில்லா விமானத்தை நோக்கி வீரா்கள் சுட்டபோதிலும், பாகிஸ்தான் எல்லைக்குள்ளயே அந்த ஆளில்லா விமானம் திரும்பிச் சென்றது.

அதன் பிறகு, அங்குள்ள பகுதிகளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 7.5 கிலோ ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்கள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டன. தொடா்ந்து நடந்த தேடுதலில், மேலும் ஏழு பாக்கெட்டுகளில் இருந்த 17.5 கிலோ ஹெராயினும் மீட்கப்பட்டது. ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்ல முயன்று சிலா் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனா். அவா்களை நோக்கி வீரா்கள் சுட்டதும் அவா்கள் தப்பித்து ஓடிவிட்டனா்.

விழிப்புடன் பணியாற்றிய எல்லைப் பாதுகாப்பு படை வீரா்களால் தேச விரோத சக்திகளின் போதைப் பொருள், ஆயுதக் கடத்தல் முயற்சி மீண்டும் முறியடிக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

ADVERTISEMENT

தொடரும் ஹெராயின் கடத்தல்கள்:

கடந்த திங்கள்கிழமை, பஞ்சாப், அமிருதசரஸ் மாவட்ட சா்வதேச எல்லைப் பகுதியில் 10 கிலோ ஹெராயினைக் கடத்தி வந்த 2 பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை எல்லைப் பாதுகாப்பு படையினா் சுட்டு வீழ்த்தினா்.

கடந்த புதன்கிழமை, பஞ்சாப், தரன் தாரன் மாவட்டத்தில் நொறுங்கி விழுந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று மீட்கப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை இரவு பஞ்சாப் காவல் துறையும் எல்லைப் பாதுகாப்பு படையும் கூட்டாக நடத்திய தேடுதல் பணியில் 5 கிலோ ஹெராயினுடன் ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT