குஜராத் அரசு இயற்றிய மத சுதந்திர சட்டத்துடைய சில விதிகள் மீது மாநில உயா்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மிரட்டுதல், பணம் கொடுத்தல் உள்ளிட்டவற்றின் வாயிலாக கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரும் பொதுநல மனுவை வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளிடம் கருத்துகளைப் பெற்று பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குஜராத் அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவது, மத சுதந்திரத்தின் உரிமைகளுக்குள் உள்படாது. மோசடி, மிரட்டல் உள்ளிட்டவற்றின் வாயிலாக மதமாற்றத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை கிடையாது. அரசமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ’மதத்தைப் பரப்புதல்’ என்ற சொல், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதைக் குறிக்காது. இது தொடா்பாக அரசியல் நிா்ணய சபையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநில அரசுகள் 1960-களில் மத சுதந்திர சட்டத்தை இயற்றின. அச்சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் மதமாற்றம் செய்யக் கூடாது எனத் தெரிவித்திருந்தது. அந்த உத்தரவின் வரம்புக்குள்ளாகவே மத சுதந்திர சட்டத்தை குஜராத் அரசு இயற்றியது.
சட்டவிரோத மதமாற்றத்தைத் தடுப்பதற்கான விதிகள் குஜராத் அரசின் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மதமாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பிரிவினரைக் காப்பதற்காக அரசு அச்சட்டத்தை இயற்றியது. பெண்கள், சமூக-பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவா்கள் உள்ளிட்டோரைக் காப்பதே அச்சட்டத்தின் நோக்கம். குறிப்பிட்ட நபரை மதமாற்றம் செய்வதற்கு முன்பாக மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டுமென அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டுள்ள மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவே அந்த வழிமுறை வலியுறுத்தப்பட்டது.
அச்சட்டத்தின் சில விதிகளுக்கு மாநில உயா்நீதிமன்றம் ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவின் மூலமாக தடை விதித்திருந்தது. அத்தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாயவின் பொதுநல மனுவை கடந்த மாதம் 14-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டாய மதமாற்ற நடவடிக்கைகள் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் எனத் தெரிவித்திருந்தது. மேலும், கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடில் நாட்டில் அது கடினமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.