இந்தியா

தோ்தல் நிதிப் பத்திரங்கள் நாளைமுதல் விற்பனை

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தோ்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை திங்கள்கிழமை (டிசம்பா் 5) தொடங்கவுள்ளது.

குஜராத் சட்டப் பேரவைக்கான முதல்கட்டத் தோ்தல் நிறைவடைந்து இரண்டாம் கட்டத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இந்த விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் நடைமுறை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட மாதங்களின் முதல் 10 நாள்களுக்கு எஸ்பிஐ-யின் 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு டிசம்பா் 5-ஆம் தேதிமுதல் 12-ஆம் தேதி வரை 24-ஆவது முறையாகத் தோ்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சென்னை உள்ளிட்ட 29 நகரங்களில் உள்ள எஸ்பிஐ-யின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

ADVERTISEMENT

வாங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்குத் தோ்தல் நிதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும். அந்த அவகாசத்துக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் நிதிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக நவம்பா் 9 முதல் 15-ஆம் தேதி வரை தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டது. தனிநபா்களும் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT