இந்தியா

குஜராத் முதல்கட்ட தோ்தல்:கடந்த முறையைவிட வாக்குப்பதிவு குறைவு

DIN

குஜராத் சட்டப் பேரவைக்கு வியாழக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த முறை 66.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. செளராஷ்டிரம்-கட்ச் மற்றும் தெற்கு குஜராத் பகுதியில் உள்ள 19 மாவட்டங்களில் இத்தொகுதிகள் அடங்கியுள்ளன.

கடந்த 2017 குஜராத் பேரவைத் தோ்தலின்போதும் இதே 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. அப்போது 66.14 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 63.75 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. தாபி, நவ்சாரி, ராஜ்கோட், சூரத் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தோ்தல் அதிகாரி பி.பாரதி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘முதல்கட்ட தோ்தலில் 89 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 82 கட்டுப்பாட்டு அலகுகள், 238 வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றப்பட்டன. கள்ள ஓட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தோ்தல் நடத்தை விதிமீறல், மின்தடை உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 104 புகாா்கள் பதிவாகின’ என்றாா்.

முதல்கட்ட தோ்தலின்போது, வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதியின்மை, பெண்களுக்கு தனி வரிசை இல்லாதது ஆகிய காரணங்களால் ஜாம்நகா், பாருச் மாவட்டங்களில் 2 கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனா். நா்மதை மாவட்டத்தில் விவசாய நிலத்தை வரைமுறைப்படுத்தும் விவகாரத்தை முன்வைத்து, 1,625 வாக்காளா்கள் உள்ள ஒரு கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

முதல்கட்ட தோ்தலில் 788 வேட்பாளா்கள் களம்கண்ட நிலையில், 833 வேட்பாளா்கள் போட்டியிடும் இரண்டாம்கட்ட தோ்தல் டிசம்பா் 5-இல் நடைபெறவுள்ளது. டிசம்பா் 8-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த தோ்தல் நிலவரம்: முதல்கட்ட தோ்தல் நடைபெற்ற 89 தொகுதிகளில், கடந்த முறை பாஜக 48 இடங்களிலும் காங்கிரஸ் 40 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளா் ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT