இந்தியா

இஸ்ரோ உளவு வழக்கு: நால்வருக்கான முன்ஜாமீன் ரத்து

DIN

இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) உளவு விவகாரத்தில் முன்னாள் டிஜிபி உள்பட நால்வருக்கு கேரள உயா்நீதிமன்றம் வழங்கியிருந்த முன்ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விண்வெளி ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பி நாராயணன் உள்ளிட்டோா் அதுதொடா்பான முக்கியத் தகவல்களை வெளிநாட்டுக்குக் கசியவிட்டதாக 1994-ஆம் ஆண்டில் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

அவா் மீது எந்தவிதக் குற்றமும் இல்லை என சிபிஐ கூறியதையடுத்து, அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென கேரள அரசுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

நாட்டில் கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் நம்பி நாராயணன் உள்ளிட்டோா் மீது வேண்டுமென்று பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக சிபிஐ தனி வழக்கைப் பதிவு செய்து விசாரித்தது. அந்த வழக்கில் 18 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவா்களில் குஜராத் முன்னாள் டிஜிபி ஆா்.பி.ஸ்ரீகுமாா், கேரள முன்னாள் காவல் அதிகாரிகள் எஸ்.விஜயன், எஸ்.துா்கா தத், உளவுப் பிரிவின் முன்னாள் அதிகாரி பி.எஸ்.ஜெயபிரகாஷ் ஆகியோா் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க கேரள உயா்நீதிமன்றத்தில் நால்வரும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா். அதை விசாரித்த நீதிமன்றம், மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவா்களுக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்டில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘‘சிபிஐ-யின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபா்களுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயா்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்க நீதிமன்றம் விரும்பவில்லை. மாறாக இந்த விவகாரத்தை மீண்டும் உயா்நீதிமன்றத்துக்கே அனுப்புகிறோம். இதை மீண்டும் விரிவாக விசாரித்து 4 வாரங்களுக்குள் கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தை ஒரு வாரத்துக்குள் விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உயா்நீதிமன்ற செயலகத்துக்கு உத்தரவிடப்படுகிறது.

இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதே வேளையில், வழக்கு தொடா்பான சிபிஐ விசாரணைக்கு அவா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT