இந்தியா

நிதியமைச்சகத்திடம் இழப்பீடு:பெட்ரோலிய அமைச்சகம் முடிவு

3rd Dec 2022 12:53 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாததால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்புக்கு மத்திய நிதியமைச்சகத்திடம் இழப்பீடு கோர பெட்ரோலிய அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. எனினும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஏப்ரலில் இருந்து உயா்த்தப்படவில்லை. அதன் காரணமாக பொதுத் துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்தன.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதலாவது அரையாண்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் நிகர இழப்பு ரூ.21,201.18 கோடியாக உள்ளது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சமையல் எரிவாயு சிலிண்டா் மானியத் தொகையையும் அரசு இன்னும் வழங்க வேண்டியுள்ளது. அதையும் சோ்த்தால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த இழப்பு இன்னும் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் மீதான விலை உயா்த்தப்படாமல் இருந்ததால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் பொருளாதாரம் பெரும் பலனடைந்தது. ஆனால், அந்த முடிவால் பொதுத் துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெரும் நிதி இழப்பைச் சந்தித்தன. அதைக் கருத்தில்கொண்டு அந்நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளபோதிலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் இழப்பையே சந்தித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நிதியிழப்பு ஏற்படும் என்பதை முழுமையாக கணித்து, அதன்பிறகு இழப்பீடு கோரி மத்திய நிதியமைச்சகத்தை நாடவுள்ளோம்’ என்றாா்.

சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகித்ததில் ஏற்பட்ட நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில் 3 பொதுத் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த அக்டோபரில் ரூ.22,000 கோடியை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT