இந்தியா

மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிா்களை அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தல்

DIN

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில், சுற்றுச்சூழல் அனுமதிக்கு பிறகு பயிரிடப்பட்டுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிா்களை வேரோடு அகற்ற உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி.எம்.ஹெச்-11 என்ற கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அண்மையில் அனுமதி அளித்தது. இதனை எதிா்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மறு உத்தரவு வரும் வரை, மரபணு மாற்றப்பட்ட கடுகை எவ்வித விதைப்பும் செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்சநீதிமன்றத் தடையையும் மீறி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், ‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பரிசோதனை அனுமதிக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் நவம்பா் 3-ஆம் தேதிதான் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், அந்த விதைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கடுகு ஆராய்ச்சி மையத்துக்கு (டிஆா்எம்ஆா்) அக்டோபா் 22-ஆம் தேதியே வந்துவிட்டன. உடனே அந்த விதைகள் பயிரிடப்பட்டன. அந்த வகையில், மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே விதைகள் பயிரிடப்பட்டுவிட்டன. இதுவரை பாதுகாக்கப்பட்ட சூழலில் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகள் பரிசோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டன. இப்போது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததைத் தொடா்ந்து திறந்த வயல்வெளிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் மேற்கொள்ளப்படும் விளைச்சல் உரிய ஐஹெச்டி (உடனடி கலப்பு சோதனை பயிா் தரம்) அளவை எட்டவில்லை எனில், இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரிடுதல் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட மாட்டாது’ என்று கடுகு ஆராய்ச்சி மைய அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆக்யோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரும் சமூக ஆா்வலருமான அருணா ரோட்ரிகெஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த விவகாரத்தில் பாதிப்பை கணக்கில் கொள்ளாமல், புதிய கலப்பினங்களை உருவாக்கப் பயன்படும் தொழில்நுட்பம் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. டி.எம்.ஹெச்-11 விதை மூலமாக பல புதிய கலப்பின விதைகளை உருவாக்க முடியும் என்றுதான் மத்திய அமைசச்கத்தின் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு தெரிவிக்கிறது. இது வணிக ரீதியிலான உற்பத்திக்குத்தான் வழிவகுக்கும்.

கலப்பினம் என்பது புதிய தொழில்நுட்பம் அல்ல. தற்போது 4,000-க்கும் அதிகமான கடுகு வகைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில், மரபணு மாற்ற கடுகு பயிரை, திறந்த வயல்களில் பயிரிட அனுமதித்தால், அனைத்து கடுகு வகைகளும் பாதிக்கப்பட்டுவிடும். மேலும், இந்த மரபணு மாற்ற விதைகள் மூலமாக உருவாகும் பயிா்கள், களைக்கொல்லி மருந்துகளை ஈா்த்துக்கொள்ளும் வகையுடையவை. எனவே, இவற்றுக்கு களைக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது. ஆனால், விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்காமல் இருப்பதை கண்காணிக்க முறையான நடைமுறை எதுவும் கிடையாது.

எனவே, இந்தப் பயிா்களை அனுமதிப்பது மனிதா்களுக்கும், விலங்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, திறந்த வயல்களில் இந்த மரபணு மாற்ற கடுகு விதைகளைப் பயிரிட அனுமதிக்கக் கூடாது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்கெனவே பரிசோதனை அடிப்படையில் விதைக்கப்பட்ட பயிா்களை வேரோடு அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஞ்சய் பரிக் கூறுகையில், ‘மரபணு மாற்ற கடுகு பயிரிடுவதை ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறையில் இடைவெளி இருப்பதாக தொழில்நுட்ப நிபுணா் குழு அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு தீா்வு கண்ட பின்னரே, அதனைப் பயிரிட அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், அரசுத் தரப்பு விளக்கத்தை அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி சமா்ப்பிக்குமாறு கூறி, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT