இந்தியா

விமான எரிபொருள் விலை 2.3% குறைப்பு

2nd Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலை 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு கிலோ லிட்டருக்கு ரூ.1,17,587-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சராசரி விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் 1-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சா்வதேச அளவில் விமான எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து, இந்தியாவிலும் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,775 (2.3 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருளின் விலை ரூ.1,17,587-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விமானங்களை இயக்குவதில் நிறுவனங்களுக்கான செலவில் சுமாா் 40 சதவீதமானது எரிபொருள் கட்டணமாகவே உள்ளது. தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் பலனடையும். விமான எரிபொருள் விலை கடந்த மாதம் கிலோ லிட்டருக்கு ரூ.4,842 குறைக்கப்பட்டிருந்தது.

சிலிண்டா் விலையில் மாற்றமில்லை:

ADVERTISEMENT

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாற்றமில்லாமல் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1-ஆம் தேதி சிலிண்டா் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். சா்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்ததையடுத்து வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 7 முறை (ரூ.610) குறைக்கப்பட்டிருந்தது.

தில்லியில் 19 கிலோ எடை கொண்ட வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.1,744-ஆக நீடிக்கிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையும் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.1,053-ஆக நீடிக்கிறது. இந்த விலை உள்ளூா் வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

பெட்ரோல், டீசல் விலை:

பெட்ரோல், டீசல் விலையிலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக ஒரே விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.96.72-க்கும் ஒரு லிட்டா் டீசல் ரூ.89.62-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.102.63-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.24-ஆகவும் உள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT