இந்தியா

திருமண விவகார வழக்குகளை விசாரிக்க அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வு

2nd Dec 2022 12:31 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் திருமண விவகார விசாரணை மாற்று வழக்குகளை விசாரிப்பதற்கென நீதிபதிகள் ஹிமா கோலி, பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைத்துள்ளாா்.

இதன்மூலம், உச்சநீதிமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக அனைத்துப் பெண் நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு நீதிபதிகள் அமா்வு தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற எண்.11-இல் வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமா்வில் 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள், 10 ஜாமீன் மனுக்கள் உள்பட 32 வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோா் அடங்கிய முதல் அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்டது. பின்னா், 2018-ஆம் ஆண்டு நீதிபதிகள் ஆா்.பானுமதி, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய இரண்டாவது அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் தற்போது பி.வி.நாகரத்னா, ஹிமா கோலி, பெலா எம்.திரிவேதி உள்ளிட்ட 3 பெண் நீதிபதிகள் உள்ளனா். இவா்களில் நாகரத்னா வரும் 2027-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் பணியிடங்களில், தலைமை நீதிபதியுடன் சோ்த்து தற்போது 27 நீதிபதிகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 10 திருமண விவகார வழக்கு விசாரணை: ‘குளிா்கால விடுமுறைக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அமா்வுகளும் தினசரி 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் மற்றும் 10 ஜாமீன் மனுக்களை விசாரிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது 3,000 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் நிலுவையில் உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT