இந்தியா

விமானப் பயணிகளை முகத்தின் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம்: 3 விமான நிலையங்களில் அறிமுகம்

2nd Dec 2022 12:45 AM

ADVERTISEMENT

விமான நிலையங்களில் நுழைவு முதல் விமானங்களில் ஏறுவது வரை பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் எண்ம அடிப்படையிலான ‘டிஜியாத்ரா’ என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி, பெங்களூரு, வாராணசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது: முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் இத்தொழில்நுட்பத்தில், பயணிகள் அளிக்கும் தகவல்கள் ரகசிய குறியீடு வடிவிலான தரவுகளாக சேமிக்கப்படும். தகவல் திருட்டு, தன்மறைப்பு உரிமை உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இத்தொழில்நுட்பம் ஹைதராபாத், புணே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படும். இத்தொழில்நுட்பம் உள்நாட்டு விமானசேவையைப் பயன்படுத்தும் விமான பயணிகளுக்கானது.

துபை, சிங்கப்பூா், அட்லாண்டா உள்ளிட்ட சா்வேதச விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைகிறது. விமானநிலையங்களுக்குள் நுழைவது முதல் விமானங்களில் ஏறுவது வரை, அடையாள அட்டை மற்றும் விமானம் ஏறுவதற்கான அனுமதியைப் பயணிகள் எடுத்துச் செல்ல தேவையில்லை என அவா் தெரிவித்தாா்.

பயன்பாட்டு முறை:

ADVERTISEMENT

இச்சேவையைப் பெற டிஜியாத்ரா செயலி வாயிலாக விமானப் பயணிகள் தங்களது தகவல்களை அளித்து ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பின் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். விமானம் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டில் உள்ள அடையாள குறியீட்டை (பாா் குறியீடு) அறிதிறன்பேசி மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் தரவுகள் விமான நிலையத்துடன் பகிரப்படும். விமான நிலையத்தின் இ-நுழைவுவாயிலில் பாா் குறியீடு அச்சிடப்பட்ட விமானத்துக்கான அனுமதி சீட்டை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயணியின் அடையாளம் மற்றும் பயண ஆவணங்களைச் சரிபாா்க்கும். இச்செயல்முறை முடிவடைந்தவுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல முடியும். இதைத்தொடா்ந்து, பாதுகாப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT