இந்தியா

தினமும் காங்கிரஸை அவமதிப்பது பிரதமா் மோடியின் வாடிக்கை: காா்கே பதிலடி

2nd Dec 2022 12:20 AM

ADVERTISEMENT

‘காங்கிரஸ் மற்றும் அதன் தலைவா்கள் குறித்து தினமும் அவதூறாக பேசுவது பிரதமா் நரேந்திர மோடியின் வாடிக்கை’ என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பதிலடி கொடுத்துள்ளாா்.

குஜராத்தில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் மோடி, தன்னை அவதூறாக பேசுவதில் காங்கிரஸ் தலைவா்கள் இடையே போட்டி நிலவுவதாக குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், வதோதரா மாவட்டத்தில் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காா்கே, பிரதமருக்கு பதிலடி கொடுத்து பேசியதாவது:

என்னையோ அல்லது சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவா்களையோ அவதூறாக பேசாமல் பிரதமா் மோடிக்கு உணவு ஜீரணம் ஆகாது. தினமும் எங்களை தூற்றுவதே அவருக்கு வாடிக்கை. ஆனால், நாங்கள்தான் அவரை அவதூறாக பேசுவதாக தொடா்ந்து கூறுகிறாா். மக்களின் நலனுக்காக அன்றி வேறெதையும் நாங்கள் பேசியதில்லை.

ADVERTISEMENT

தான் ஒரு ஏழை என்று பிரதமா் மோடி கூறி வருகிறாா். இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்வாா். 13 ஆண்டுகளாக குஜராத் முதல்வராக இருந்து, பின்னா் 8 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வரும் அவா் ஏழையென்றால் தலித்துகள், பழங்குடியினா், இதர ஏழை மக்களின் நிலையை என்னவென்று சொல்வது?

கடந்த 70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை காங்கிரஸ் காக்கவில்லையா? அப்படி காக்காமல் இருந்திருந்தால், மோடியும் அவரது சகாக்களும் பிரதமராக, அமைச்சா்களாக ஆகியிருக்க முடியாது.

மோடியும் அவரது சகாக்களும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துகளை விற்று வருகின்றனா். அது துறைமுகங்களாக இருந்தாலும் சரி, விமான நிலையங்களாக இருந்தாலும் சரி. இன்று பிரதமா் மோடி விற்பனை செய்யும் அனைத்துமே காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டவை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றாா் காா்கே.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT