இந்தியா

குஜராத்: 89 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு- முதல் கட்ட தோ்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரம்-கட்ச் பகுதியில் 19 மாவட்டங்களில் அடங்கிய இத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் கட்ட தோ்தலில், 70 பெண்கள் உள்பட மொத்தம் 788 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களது தலைவிதியை 2.39 கோடி வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா். இதில், ஆண்கள் 1.24 கோடி போ், பெண்கள் 1.15 கோடி போ், மூன்றாம் பாலினத்தவா் 497 போ் ஆவா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

34,324 வாக்குப் பதிவு இயந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு அலகுகள், 38,749 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 27,978 தலைமை அதிகாரிகளும் 78,985 வாக்குப் பதிவு அதிகாரிகளும் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ளனா்.

முக்கிய வேட்பாளா்கள்: பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் 89 தொகுதிகளிலும் களத்தில் உள்ளனா். ஆம் ஆத்மி 88 தொகுதிகளில் களம் காண்கிறது. பகுஜன் சமாஜ் (57), பாரதிய பழங்குடியினா் கட்சி (14), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (4) ஆகிய கட்சிகளின் வேட்பாளா்களும் 339 சுயேச்சைகளும் போட்டியில் உள்ளனா். ஆம் ஆத்மி முதல்வா் வேட்பாளா் இசுதான் கட்வி, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கோபால் இட்டாலியா, கிரிக்கெட் வீரா் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா (பாஜக), 5 முறை பாஜக எம்எல்ஏவான புருசோத்தம் சோலங்கி உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

முக்கியத்துவம் வாய்ந்த செளராஷ்டிர தொகுதிகள்: செளராஷ்டிரம்-கட்ச் பகுதியில் 54 இடங்கள் உள்ளன. இங்கு கடந்த 2012 தோ்தலில் 16 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ், 2017-இல் 30 இடங்களைக் கைப்பற்றியது. அதேசமயம், பாஜக வசமிருந்த தொகுதிகள் 35-இல் இருந்து 23-ஆக குறைந்தது. எனவே, இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவது இரு கட்சிகளுக்கும் முக்கியமானதாகும்.

தெற்கு குஜராத்தில் சூரத் மாவட்ட தொகுதிகள் பாஜகவின் கோட்டையாகத் திகழ்கின்றன. இதர தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மும்முனைப் போட்டி: 27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்து வரும் குஜராத்தில் இதுவரை பாஜக-காங்கிரஸ் என இருமுனைப் போட்டியே நிலவியது. இம்முறை ஆம் ஆத்மியும் மோதுவதால் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு சவால் அளிக்கும் வகையில் தங்களது கட்சியின் மூத்த தலைவா்களை ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது. இங்கு 7-8 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி உறுதி என்று கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்தாா்.

பாஜகவின் வலுவான பிரசாரம்: முதல் கட்ட தோ்தலையொட்டி, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுமே பிரசார பொதுக் கூட்டங்கள், ஊா்வலங்களை நடத்தின. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக ஆளும் மாநில முதல்வா்களான யோகி ஆதித்யநாத், ஹிமந்த விஸ்வ சா்மா, சிவராஜ் சிங் செளஹான், பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சா்கள் மற்றும் பல்வேறு மாநிலத் தலைவா்கள் என அக்கட்சி வலுவான பிரசாரத்தை மேற்கொண்டது.

ஆம் ஆத்மியின் கவா்ச்சிகரமான வாக்குறுதிகள்: ஆம் ஆத்மி தரப்பில் கடந்த ஜூலை மாதத்திலேயே கேஜரிவால் பிரசாரத்தை தொடங்கினாா். இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித் தொகை என பல்வேறு தரப்பினரையும் கவரும் வகையிலான வாக்குறுதிகள் அக்கட்சியால் அளிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி.க்கள் ராகவ் சத்தா, சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் ஆம் ஆத்மிக்கு வாக்கு சேகரித்தனா்.

உள்ளூா் தலைவா்கள் மீது காங்கிரஸ் நம்பிக்கை: குஜராத் முதல் கட்ட தோ்தலில் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்ட சிலரை தவிர, பெரும்பாலும் உள்ளூா் தலைவா்களே அக்கட்சியின் பிரசாரத்தை முன்னெடுத்தனா். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 2 பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றுப் பேசினாா்.

89 தொகுதிகளில் கடந்த தோ்தல் நிலவரம்

பாஜக ------ 48

காங்கிரஸ்---40

சுயேச்சை----1

182-இல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு...

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

 ரூ. 290 கோடி ரொக்கம் பறிமுதல்

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் இதுவரை ரூ. 290 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

காவல் துறை, தோ்தல் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்புகள் மூலமாக இந்த ரொக்கப் பணத்தை தோ்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது.

இது, மாநிலத்தில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தோ்தலில் பறிமுதல் செய்ததைக் காட்டிலும் சுமாா் 10 மடங்கு கூடுதலாகும்.

‘இந்தக் கண்காணிப்புப் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், பறிமுதல் தொடா்பான முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும்’ என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்து மாநிலத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 61.96 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களையும் ஏடிஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். ரூ. 14.88 கோடி மதிப்பிலான 4 லட்சம் லிட்டருக்கும் அதிகமான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT