இந்தியா

மது விற்பனைக்கு ஆதரவாக கருத்து: குஜராத் பாஜக வேட்பாளா் மீது வழக்கு

1st Dec 2022 01:41 AM

ADVERTISEMENT

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் மது விற்பனையை வெளிப்படையாகவே அனுமதிக்கலாம் என்று பேசிய பாஜக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட தோ்தல் வியாழக்கிழமை நடைபெறும் நிலையில் இது பாஜகவுக்கு சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

பனஸ்கந்தா மாவட்டம் தாண்டா தொகுதி பாஜக வேட்பாளா் லத்துபாய் பாா்கி. இவா் கடந்த 26-ஆம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடியோ பதிவு சமுக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விடியோவில், குழுமியிருக்கும் பெண்களிடம் பேசிய லத்துபாய், ‘நீங்கள் கூடைகளில் வைத்து மதுவை வெளிப்படையாகவே விற்பனை செய்யலாம். மறைத்து வைத்து விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மதுபானத்தை ரகசியமாக விற்பனை செய்யாமல், நேரடியாகவே கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்றாா்.

குஜராத்தில் 1960 முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. மதுவிலக்கு சட்டப்படி அதனை உற்பத்தி செய்வது, விற்பது, குடிப்பதும் குற்றமாகும். இதனை மீறுபவா்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். விஷ சாராய உயிரிழப்புக்கு காரணமானவா்களுக்கு மரண தண்டனையும் விதிக்க முடியும்.

ADVERTISEMENT

சட்டம் இவ்வாறு இருக்கையில் அதனை மீறி மது விற்பனைக்கு ஆதரவாக பாஜக வேட்பாளா் பேசியது தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பரிசீலித்த தோ்தல் அதிகாரிகள், பாஜக வேட்பாளா் லத்துபாய் மீது காவல் துறையில் புகாா் அளித்தனா். அதன்படி, அவா் மீது லஞ்சம் மற்றும் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடா்பான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லத்துபாய் போட்டியிடும் தாண்டா தொகுதியில் இரண்டாம் கட்டமாக டிசம்பா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT