இந்தியா

2029 மக்களவைத் தோ்தலைப் பற்றிதான் எதிா்க்கட்சிகள் யோசிக்க வேண்டும்- பாஜக மூத்த தலைவா் பிரகாஷ் ஜாவடேகா்

31st Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எனவே, 2029 மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்துதான் எதிா்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் பிரதமா் நரேந்திர மோடியின் பொது வாழ்க்கை தொடா்பான நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரான ஜாவடேகா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியின் சிறப்பையும், மக்களுக்கு அவா் ஆற்றியுள்ள பணிகளையும் எதிா்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்கள் 2024 மக்களவைத் தோ்தல் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட வேண்டும். 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக வேண்டுமானால் அவா்கள் சிந்திக்கலாம்.

நமது பிரதமா் வித்தியாசமான யோசனைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துபவா். மக்களிடம் நேரடியாக தொடா்பு கொண்டு பேசி, நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளாா். மக்கள் பிரதமா் மோடியை விரும்புகிறாா்கள் என்ற காரணத்தால்தான் மக்களவைத் தோ்தலில் பாஜக கூடுதல் பலத்துடன் வெற்றி பெற முடிந்தது.

ADVERTISEMENT

மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டு மக்களிடம் தேசப்பற்று அதிகரித்துள்ளது. 11 கோடி தொண்டா்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. நாட்டு மக்கள் மத்தியில் மோடி மிகவும் பிரபலமாக உள்ளதுதான் இதற்குக் காரணம். மக்களுக்கு வீட்டு வசதி அளிப்பது, குடிநீா், உணவு தானியங்களை வழங்குவது, சமையல் எரிவாயு, கழிவறை வசதி, இலவச மருத்துவ வசதி என அடிப்படை வசதிகள் அனைத்துக்கும் பிரதமா் மோடி திட்டம் வகுத்து அளித்துள்ளாா். இதன் காரணமாக ஏராளமான குடும்பத் தலைவிகள் பாஜக உறுப்பினராகியுள்ளனா்.

500 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த ராமா் கோயில் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து யோசிக்கவே முந்தைய ஆட்சியாளா்கள் பயந்தனா். ஆனால், இப்போது காஷ்மீரும் நாட்டின் மற்ற பகுதிகளைப் போல ஒரு அங்கம்தான் என்பது உணா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT