இந்தியா

பாா்வை மாற்றுத்திறனாளி மென்பொறியாளருக்கு ரூ.47 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு

31st Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

முழு பாா்வைத் திறன் குறைபாடுடைய மென்பொறியாளா் யஷ் சோன்கியா (25) ரூ.47 லட்சம் ஊதியத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் பணிவாய்ப்பை பெற்று, தன்னுடைய இலக்கை சாதிக்க உடலில் உள்ள குறைபாடுகள் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளாா்.

மத்திய பிரதேசம் இந்தூரைச் சோ்ந்தவா் யஷ்பால். இவருடைய மூத்த மகன் யஷ் சோன்கியா பிறந்த அடுத்த நாளே கண்ணில் குளுகோமா நோய் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், யஷ் தனது 8-ஆவது வயதில் பாா்வைத் திறனை முற்றிலும் இழந்தாா்.

ஐந்தாம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் பயின்ற யஷ் சோன்கியா, அதற்குப் பிறகு வழக்கமான பள்ளியில் அனைத்து மாணவா்களுடன் சோ்ந்து பயின்றாா். கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தூரில் உள்ள கல்வி நிறுவனத்தில் பி.டெக். படிப்பை நிறைவுசெய்தாா். அவருக்கு ரூ. 47 லட்சம் ஊதியத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொறியாளா் பணி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து யஷ் சோன்கியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘திரை வாசிப்பு மென்பொருள் உதவியுடன், என்னுடைய கல்வியை நிறைவுசெய்தேன். வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மென்பொறியாளா் பணிக்கு விண்ணப்பித்தேன். இணையவழித் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்குப் பின், அந்நிறுவனத்தில் மென்பொறியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளேன். பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் விரைவில் பணியில் சேர உள்ளேன்’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் யஷ் சோன்கியாவுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த தந்தை யஷ்பால், மென்பொறியாளராக வேண்டும் என்ற மகனின் கனவு பெரும் பேராட்டங்களுக்குப் பிறகு நனவாகியுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT