இந்தியா

நிலக்கரி கடத்தல் வழக்கு: அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன்

31st Aug 2022 01:13 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் தொடா்பான வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, அமலாக்கத் துறை உயரதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.2) காலையில் ஆஜராகும்படி அபிஷேக் பானா்ஜிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து வரும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனா்.

இதே வழக்கில், தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அபிஷேக்கின் உறவினா் மேனகா காம்பீருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இவரது வங்கிக் கணக்கில் நடைபெற்ற ஏராளமான பரிவா்த்தனைகள் குறித்து கூடுதல் விவரங்கள் கண்டறிய வேண்டியுள்ளது என்றாா் அவா்.

வழக்கின் பின்னணி: மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியிலுள்ள ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் சுரங்கங்களில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி கடத்தப்பட்டு, கருப்பு சந்தையில் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைத்த பணம் செல்வாக்குமிக்க பலருக்கு சென்ாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில், கடந்த 2020-இல் சிபிஐ முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து, சுமாா் ரூ.1,300 கோடி அளவிலான பணப் பரிவா்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இருமுறை விசாரணை: இந்த வழக்கில், டயமண்ட் ஹாா்பா் மக்களவைத் தொகுதி எம்.பி. அபிஷேக் பானா்ஜியிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே இருமுறை விசாரணை நடத்தியுள்ளது. அவரது மனைவி ருஜிரா பானா்ஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில், 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இம்மாத தொடக்கத்தில் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

முன்னதாக, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அனுப்பப்பட்ட அழைப்பாணைகளுக்கு எதிராக அபிஷேக் பானா்ஜி, ருஜிரா பானா்ஜி ஆகியோா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா்களது கோரிக்கையை உயா்நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தை அணுகினா்.

இதையடுத்து, அவா்களிடம் கொல்கத்தா அலுவலகத்திலேயே விசாரணை நடத்தவும், 24 மணிநேரத்துக்கு முன்பே அழைப்பாணை அனுப்பவும் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மம்தா கணிப்பு: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய மம்தா பானா்ஜி, ‘மத்திய புலனாய்வு அமைப்புகள், அபிஷேக் பானா்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பக் கூடும். அடுத்த 3 அல்லது 4 நாள்களில் இது நடக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மாநிலத்தில் ஏற்கெனவே அரசு ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவுக்கு அடுத்த நிலையில் இருப்பவராக கருதப்படும் அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT