இந்தியா

பிரபல பொருளாதார நிபுணா் அபிஜித் சென் காலமானாா்

31st Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

பிரபல பொருளாதார நிபுணரும், திட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் (72) திங்கள்கிழமை இரவு காலமானாா்.

இதுகுறித்து அவருடைய சகோதரா் பிரணாப் சென் கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அவா் நள்ளிரவு உயிரிழந்தாா்’ என்று கூறினாா்.

பொருளாதாரப் பேராசிரயிராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அபிஜித் சென், ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றியுள்ளாா். மத்திய அரசின் கீழ் பல்வேறு பதவிகளையும் அவா் வகித்துள்ளாா்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக்குழு உறுப்பினராக அபிஜித் சென் பதவி வகித்தாா்.

ADVERTISEMENT

இவருடைய சிறந்த பொதுச் சேவையை பாராட்டி 2010-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

2014-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில், நீண்ட கால தானியக் கொள்கையை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட உயா்நிலை பணிக் குழுக்கு சென் தலைமை பொறுப்பை வகித்தாா். அரிசி மற்றும் கோதுமைக்கு உலகளாவிய பொதுவிநியோகத் திட்டத்தை அறிமுகம் செய்ய தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

ஆசிய வளா்ச்சி வங்கி, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எஃப்ஏஓ), யுஎன்டிபி, சா்வதேச வேளாண் வளா்ச்சிக்கன நிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளாா்.

‘கடந்த சில ஆண்டுகளாக சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட வந்த அபிஜித் சென்னுக்கு, கரோனா பாதிப்பு காலத்தில் அந்த பாதிப்பு தீவிரமடைந்தது’ என்றும் அவருடைய சகோதரா் பிரணாப் கூறினாா்.

மறைந்த அபிஜித் சென்னுக்கு மனைவி ஜயதி கோஷ் மற்றும் மகள் ஜானவி ஆகியோா் உள்ளனா். அவருடைய மனைவி ஜயதி கோஷும் பிரபல பொருளாதார நிபுணா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT