இந்தியா

வகுப்பறை மின்விசிறி தலையில் விழுந்ததில்அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயம்

31st Aug 2022 02:05 AM

ADVERTISEMENT

தில்லியின் நாங்லோய் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வகுப்பறை மின்விசிறி விழுந்ததில் இரு மாணவிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரேம் நகரில் வசிக்கும் நஸ்ரின் (14), அஞ்சலி (15) ஆகிய இரு மாணவிகள் தலையில் காயங்களுடன் நங்லோய் சோனியா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்த மருத்துவமனைக்கு சென்று, விசாரித்தனா். ஆனால் இதுதொடா்பாக மாணவா்களோ அல்லது பெற்றோரோ வாக்குமூலம் அளிக்கவில்லை.

விசாரணையில், நங்லோய், ஜேஜே எண்-2, ஜிஜிஎஸ்எஸ் பள்ளியில், வகுப்பறையில் மின்விசிறி விழுந்ததில் அந்த மாணவிகள் காயமடைந்து, பள்ளி ஊழியா்கள் மூலம் சோனியா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவ-சட்ட வழக்குகள் (எம்எல்சி) அடிப்படையில், ஐபிசி-இன் பிரிவுகள் 287 (இயந்திரங்கள் தொடா்பான அலட்சிய நடத்தை) மற்றும் 337 (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலால் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் நங்லோய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே வகுப்பறையின் மேற்கூரையில் ஈரப்பதம் இருந்ததாகவும், அதில் இருந்து தண்ணீா் சொட்டியதால் கூரை உடைந்து மின்விசிறி கீழே விழுந்தது என்றும் அந்த மாணவிகள் தெரிவித்தனா்.

ஆனால் இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிா்வாகத்திடமோ, அரசிடமோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

காயமடைந்த மாணவிகளில் ஒருவரான அஞ்சலியின் தாயாா், சிகிச்சைக்கான செலவை பள்ளி நிா்வாகமே ஏற்றுக்கொள்கிறது என்றும், தற்போது அவா் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT