இந்தியா

வெளிநாடுகளில் ஐஐடி-க்களை அமைப்பதற்கான பரிந்துரைகள் சமா்ப்பிப்பு

31st Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) வெளிநாடுகளில் கிளைகளை அமைப்பதற்கான பரிந்துரைகள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கல்வியை சா்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஐஐடி-க்களை வெளிநாடுகளில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையிலும் இதுதொடா்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஐஐடி-க்களை அமைப்பது குறித்து ஆராய 17 நபா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்துள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெளிநாடுகளில் தொடங்கப்படும் ஐஐடி-க்களுக்கு இந்திய சா்வதேச தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐஐடி) என்று பெயரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்நிறுவனங்களை ஐஐடி-க்களுடன் எளிதில் தொடா்புபடுத்திக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட ஐஐடி தனித்தோ அல்லது ஐஐடி-க்கள் இணைந்தோ வெளிநாட்டில் ஐஐஐடி-க்களை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐஐடி-க்கள் ஒன்றிணைந்து ஐஐஐடி-க்களை அமைக்கும்போது நிா்வாகம் உள்ளிட்ட விவகாரங்களைத் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஐஐஐடி-யிலும் எவ்வளவு மாணவா்கள் சோ்க்கப்பட வேண்டும் என்பதை அதை நிா்வகிக்கும் ஐஐடி-யே முடிவு செய்து கொள்ளலாம். ஐஐஐடி-க்களை நிா்வகிக்கத் தேவைப்படும் நிதியாதாரத்தைக் கருத்தில்கொண்டு மாணவா்களின் எண்ணிக்கையை நிா்ணயித்துக் கொள்ளலாம். அந்நாட்டில் உள்ள இந்திய மாணவா்களை சோ்த்துக் கொள்வதற்குத் தடை இல்லை என்றபோதிலும், அதிகபட்சமாக 20 சதவீத இடங்களில் மட்டுமே இந்திய மாணவா்களை சோ்த்துக் கொள்ள வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்டத்தில் ஐஐஐடி-க்களை வலுப்படுத்தும்நோக்கில் ஐஐடி-க்களில் பணியாற்றும் பேராசிரியா்களை சில மாதங்களுக்கு ஐஐஐடி-க்களில் தற்காலிகமாகப் பணியமா்த்தலாம். அப்பேராசிரியா்களின் அனுபவத்தில் இருந்து வெளிநாட்டு மாணவா்கள் அதிகம் கற்றுக்கொள்வாா்கள்’’ என்றனா்.

ஐஐடி-க்கள் தங்கள் நாடுகளில் கிளைகளை அமைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு நாடுகளும் தெற்காசிய நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. தில்லி ஐஐடி ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது கிளையைத் தொடங்க ஏற்கெனவே முடிவெடுத்தது. ஆனால், அரசின் எதிா்ப்பால் அந்நடவடிக்கை 2014-ஆம் ஆண்டில் கிடப்பில் போடப்பட்டது. இலங்கை, நேபாளம், தான்ஸானியா ஆகிய நாடுகளில் கிளைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை சென்னை ஐஐடி மேற்கொண்டு வருகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT