இந்தியா

மின்னணு சந்தைகளில் தரமற்ற எடை, அளவீடு கருவிகள் விற்பனை: 63 நிறுவனங்களுக்கு நுகர்வோர் துறை நோட்டீஸ்

31st Aug 2022 02:21 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

இணக்கமற்ற எடை, அளவிடும் கருவிகளை இறக்குமதி செய்தோ, உற்பத்தி செய்தோ மின்னணு சந்தைகளில் விற்பனை செய்து வரும் 63 உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எடை மற்றும் அளவிடும் கருவிகளில் சட்ட விதிகளுக்கு இணங்காமல், மின்னணு வணிக வலைதளங்களில் தனிநபர் எடைபார்க்கும் இயந்திரங்கள் மற்றும் சமையலறை பொருள்களுக்கான எடை பார்க்கும் தராசு கருவிகள் விற்பனை செய்யப்படுவது மத்திய நுகர்வேர் மற்றும் தொழிலாளர் துறைகளுக்கு தெரியவந்தது.
வணிக தளங்களில் இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத விற்பனையானது நுகர்வோருக்கான சேவையில் குறைபாடுகள் உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசுக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தியது எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எந்த விதிமுறைகளின் அடிப்படையில் எடை மற்றும் அளவிடும் கருவிகளை வணிகத் தளங்களில் விற்கிறீர்கள் என கேட்டு 63 வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட ரீதியான அளவியல் சட்டம் 2009-இன் கீழ் எடை மற்றும் அளவீடு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படும் போது தங்கள் கருவிகளின் மாதிரிக்கு உரிய அங்கீகாரம், தயாரிப்பு உரிமம், அளவீடு கருவியின் சரிபார்ப்பு போன்றவற்றை சட்டபடி பெற வேண்டியது கட்டாயமாகும்.
மின்னணு சந்தை தளங்களில் விற்கப்படும் எடை மற்றும் அளவீடு கருவிகள் வைக்கப்படும் பெட்டிகளில் உரிய தகவல்கள் இடம் பெற வேண்டும். சட்டரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருள்கள்) விதிகளின் கீழ் உள்ள அம்சங்கள் அடிப்படையில் இவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
இதுபோன்ற விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT