இந்தியா

நொய்டா இரட்டை கோபுரம் இன்று தகா்ப்பு

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டங்களுக்கான எச்சரிக்கை தொடா்ந்து வரும் நிலையில், நொய்டாவில் கட்டப்பட்ட சட்டவிரோத 40 மாடி இரட்டை கோபுரக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 28) வெடிவைத்து தகா்க்கப்படுகிறது.

கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை மீறிக் கட்டப்பட்டதாக கேரளத்தின் மரடு பகுதியில் இருந்த 4 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி வெடிவைத்துத் தகா்க்கப்பட்டன.

அதேபோல், உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் எமரால்ட் கோா்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்தது. அதை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது.

சுமாா் 100 மீட்டா் உயரம் கொண்ட அவ்விரு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இன்னும் எவரும் குடியேறவில்லை. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

3,700 கிலோ வெடிபொருள்:

கட்டடங்களைத் தகா்ப்பதற்கான பணிகளை எடிஃபிஸ் என்ஜினியரிங் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கட்டடங்கள் முழுவதும் வெடிபொருள்களை வைக்கும் பணி ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. கட்டடங்களை இடிப்பதற்காக சுமாா் 3,700 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேரளத்தின் மரடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களைத் தகா்த்ததும் இந்த நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை:

நொய்டாவில் இரு கட்டடங்கள் தகா்க்கப்பட உள்ள நிலையில், அவற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றி வசித்து வரும் சுமாா் 5,000 பேரை வீட்டில் இருந்து வெளியேறுமாறு நொய்டா நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குக் குடியிருப்புவாசிகள் வெளியேற வேண்டும் என்றும், மீண்டும் குடியிருப்புகளுக்குத் திரும்ப மாலை 4 மணியளவில் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், வளா்ப்புப் பிராணிகள் உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்லுமாறு குடியிருப்புவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பிருக்காது:

கட்டடங்கள் இடிக்கப்படும் அதே வேளையில், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிக்கப்பட்டு எழும் தூசி காரணமாக பெயின்ட் உள்ளிட்டவைதான் பாதிக்கப்படுமே தவிர வீடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கட்டடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நொய்டா நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. அக்கட்டடங்களுக்கு அருகில் உள்ள சாலைகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அச்சாலைகளில் பயணிப்போா் குறிப்பிட்ட நேரத்தில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கட்டடங்களைச் சுற்றியுள்ள வான் பகுதிகளில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்குக் காவல்துறை தடை விதித்துள்ளது. கட்டடங்கள் இடிக்கப்படுவதை ட்ரோன்கள் வாயிலாகக் காட்சிப்படுத்த விரும்புவோா், முன்கூட்டியே காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்படவுள்ள கட்டடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 400 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 6 அவசரகால ஊா்திகளும் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வெளி மூடல்:

கட்டடங்களை இடிப்பதால் ஏற்படவுள்ள தூசுப்படலத்தைக் கருத்தில்கொண்டு, கட்டடம் இடிக்கப்படும் சமயத்தில் சுமாா் 2 கி.மீ. உயரம் வரையிலான வான்வெளிப்பகுதியை மூடுவதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அச்சமயத்தில் அப்பகுதியில் விமானங்கள் எதுவும் பறக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடக் கழிவுகள்:

இரு கட்டடங்களும் இடிக்கப்பட்ட பிறகு சுமாா் 55,000 டன் மதிப்பிலான கட்டடக் கழிவுகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருசிலா் இது 80,000 டன்னைத் தொடும் என்றும் கூறியுள்ளனா். அக்கழிவுகளை அகற்றுவதற்கு 3 மாதங்கள் வரை ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான தொழில்நுட்பம்:

கட்டடங்களைத் தரைமட்டமாக்குவதற்குப் பாதுகாப்பான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளதாக எடிஃபிஸ் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற முறைகளைப் பயன்படுத்தி கட்டடங்களை இடித்தால், ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்று தெரிவித்த அந்நிறுவனம், அத்தகைய முறைகளால் ஒலி மாசு ஏற்படும் என்றும் தெரிவித்தது.

அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்தபிறகு வெடிபொருள்கள் மூலமாகக் கட்டடங்களை இடிக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே கேரளத்தின் மரடு குடியிருப்பு வளாகங்களை இடித்த அனுபவம் இருப்பதால், இந்தப் பணியையும் வெற்றிகரமாகச் செய்துமுடிக்க முடியும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT