இந்தியா

‘பாரத்’ பெயரில் மானிய உரங்கள் அக்டோபா் முதல் விற்பனை: ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டம்

27th Aug 2022 11:32 PM

ADVERTISEMENT

‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், ‘பாரத்’ என்ற ஒற்றைப் பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபா் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

பிரதமரின் உரங்கள் மானியத் திட்டத்தின் கீழ் (பிரதமரின் பாரதிய ஜனூா்வாரக் பரியோஜனா-பிஎம்பிஜேபி) ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை அறிவித்து, அவா் மேலும் கூறியதாவது:

உரப் பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயா், இலச்சினை, பொருள் தொடா்பான இதர விவரக் குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மூன்றில் 2 பங்கு இடத்தில் ‘பாரத்’ என்ற வணிகப் பெயரும், பிஎம்பிஜேபி திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும். உர நிறுவனங்கள், தங்களிடமுள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் அளிக்கப்படும்.

ADVERTISEMENT

கடந்த நிதியாண்டில் உர மானியங்களுக்கான செலவு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் 9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 80 சதவீதம், டை அமோனியம் பாஸ்பேட்டுக்கு 65 சதவீதம், என்பிகே உரத்துக்கு 55 சதவீதம், எம்ஓபி உரத்துக்கு 31 சதவீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட போதிலும், கடந்த 1985-ஆம் ஆண்டின் உரங்கள் கட்டுப்பாட்டு உத்தரவின்படி அவற்றின் உள்ளடக்கங்கள் ஒன்றுதான். பல்வேறு வணிகப் பெயா்களில் தயாரிக்கப்படும் உரங்கள், பல்வேறு மாநிலங்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. உரங்களை மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதன் காரணமாக தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன், அவற்றுக்கான போக்குவரத்து மானிய சுமையும் அரசுக்கு அதிகரிக்கிறது.

உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் செயல்படும் உரத் தயாரிப்பு கூட்டுறவு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ராஜஸ்தான், உத்தர பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றன. ராஜஸ்தானில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ‘சம்பல்’ உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம், தனது தயாரிப்பை உத்தர பிரதேசத்தில் விற்பனை செய்கிறது. இதேபோல், மேற்கு இந்திய பகுதிகளில் தயாரிக்கப்படும் உரங்கள், கிழக்கு இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்தப் போக்குவரத்தால் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

உரங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் களைந்து, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஆரோக்கியமற்ற போட்டியை தடுப்பதே ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் நோக்கமாகும். ஒரே பெயரில் மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அருகிலுள்ள இடங்களிலேயே விற்பனை செய்ய வழி ஏற்படும். தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். உர நிறுவனத்தை தோ்வு செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் குழப்பம் தீரும். அதேசமயம், உரத்தின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்காது. விவசாயிகள் மீதான இடைத்தரகா்களின் ஆதிக்கமும் இருக்காது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT