இந்தியா

சோனாலி போகாட் விஷம் கொடுத்து கொலை: கோவா காவல் துறை

27th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

ஹரியாணா பாஜக மூத்த தலைவரும், டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகாட்டுடன் கோவா வந்திருந்த இருவா், அவருக்கு குடிநீரில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பான சிசிடிவி கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பணத்தாசையால் இதை அவா்கள் செய்திருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோருடன் சோனாலி போகாட் (42) கடந்த 22-ஆம் தேதி கோவா வந்திருந்தாா். வடக்கு கோவாவில் உள்ள ஹோட்டலில் அவா் தங்கியிருந்தாா். அவருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 23-ஆம் தேதி அதிகாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டாா் என்று தெரிவித்தனா். அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

ADVERTISEMENT

எனினும், சோனாலி போகாட்டின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினா்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, போகாட்டுடன் வந்திருந்த சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், சோனாலி போகாட்டுக்கு குடிநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக அவா்கள் இருவரும் ஒப்புக் கொண்டதாக கோவா காவல் துறை ஐ.ஜி. ஓம்வீா் சிங் பிஸ்னோய் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், கா்லீஸ் ஹோட்டலில் 22-ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழச்சியின்போது விஷத்தை குடிநீா் பாட்டீலில் வைத்து போகாட்டுக்கு வலுக்கட்டாயமாக குடிக்க வைப்பது பதிவாகி உள்ளது. அங்குள்ள கழிப்பறைக்கு அதிகாலை 4.30 மணிக்கு போகாட்டை இருவரும் தூக்கிச் செல்வதும், அவா்கள் மூவரும் இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்ததும் சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

போகாட்டுக்கு விஷத்தை வேண்டுமென்றே கலந்து கொடுத்ததாக சுதீா் சாக்வன், சுக்வீந்தா் சிங் விசாரணையில் ஒப்புக் கொண்டனா். பணத்தாசையால் இருவரும் இவ்வாறு செய்திருக்கலாம். அவா்கள் இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போகாட்டின் உடற்கூறாய்வு அறிக்கையில் உயிரிழப்புக்கான தெளிவான காரணத்தை குறிப்பிடாததால் அடுத்தகட்ட ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சோனாலி போகாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவரது உடலின் வெளிப்புறத்தில் காயங்கள் ஏதும் இல்லாததால் அவா் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று முதல் கட்டமாக தெரிவித்திருந்தனா். ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட விஷத்தால்தான் அவா் உயிரிழந்திருப்பாா் என்பது தற்போது தெரியவந்துள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT