இந்தியா

சோனாலி போகாட் மரணத்தில் திடுக்கிடும் தகவல்: உணவக உரிமையாளர் உள்பட மேலும் இருவர் கைது!

27th Aug 2022 01:13 PM

ADVERTISEMENT

 

நடிகையும் பாஜக தலைவருமான சோனாலி போகாட் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவா காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக அஞ்ஜுனாவில் உள்ள கர்லீஸ் உணவகத்தின் உரிமையாளரையும், போதைப்பொருள் கடத்தல்காரராக சந்தேகிக்கப்படும் தத்பிரஷாத் கௌங்கரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இதுவரை மொத்தம் நான்கு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்

ADVERTISEMENT

முன்னதாக, வெள்ளியன்று போகாட்டின் உதவியாளர் சுதீர் சங்வான் மற்றும் அவரது கூட்டாளி சுக்விந்தர் சிங் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 22-ம் தேதி போகாட்டுடன் கோவாவுக்குச் சென்ற இருவரும் கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு ரசாயனம் கலந்த திரவத்தை வற்புறுத்திக் குடிக்கச் செய்ததாக போலீசார் விசாரணையில் ஒப்புக் கொண்டனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளனர். 

இதற்கிடையில், இன்று கைது செய்யப்பட்ட கௌங்கர், சுக்விந்தர் சிங்குக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் இதுவரை 25-க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கர்லீஸ் உணவகத்தின் உரிமையாளரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

படிக்க: இந்தியாவில் 2030க்குள் 6ஜி சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு

42 வயதாகும் சோனாலி போகாட் ஆகஸ்ட் 23 அன்று வடக்கு கோவாவில் உள்ள அஞ்ஜுனாவில் உள்ள புனித அந்தோணி மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பலத்த காயம் இருந்ததாகக் கூறப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கோவா போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் போகாட்டின் உடல் நேற்று ஹிசாரில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. 

மேலும், போகாட் மரணம் தொடர்பாக கோவா போலீசார் நால்வரைக் கைது செய்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT