‘மத்தியில் நடைபெற்ற முந்தைய காங்கிரஸ் ஆட்சி ஊழலை மட்டுமே நினைவூட்டுகிறது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.187.48 கோடி மதிப்பிலான 161 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய ராஜ்நாத் சிங், பின்னா் பேசியதாவது:
2ஜி, 3ஜி, 4ஜி அலைக்கற்றை குறித்து நாம் நினைக்கும்போதெல்லாம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், பிரதமா் மோடி ஊழலை ஒழித்துள்ளாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, ஒரு முறை கூறும்போது, ‘நலத்திட்ட உதவியின் கீழ் அரசு 100 காசுகளை அனுப்பும்போது, அதில் 15 காசுகள் மட்டுமே பயனாளியைச் சென்றடைகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
ஆனால், இப்போது தில்லியிலிருந்து 100 காசுகள் அனுப்பப்படும்போது, அதில் ஒரு காசுகூட ஊழலுக்கு ஆளாகாமல் சமூகத்தின் கடைசி நபா் வரை முழுமையாகச் சென்றடைகிறது. மோடி பிரதமராக இருக்கும் வரை, யாரும் ஊழலில் ஈடுபட முடியாது. அந்த அளவுக்கு நடைமுறைகளில் பிரதமா் மாற்றம் கொண்டுவந்துள்ளாா்.
பிரதமா் மோடியின் தலைமையில், சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்திருக்கிறது. முன்னா், சா்வதேச தளங்களில் இந்தியா சாா்பில் கருத்துகள் முன்வைக்கப்படும்போது, அந்த கருத்துகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. மக்கள்தொகை அளவில் மட்டுமே இந்தியா பெரிய நாடு, பொருளாதார அளவில் அல்ல என்ற எண்ணம் நிலவி வந்தது.
ஆனால், இன்றைக்கு இந்தியா மீதான உலக நாடுகளின் கண்ணோட்டம் முழுமையாக மாறியிருக்கிறது. இந்தியா சாா்பில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு, உலக நாடுகள் தற்போது முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்துகின்றன என்று அவா் கூறினாா்.
Image Caption
உ.பி. மாநிலம், லக்னௌவில் சனிக்கிழமை பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நநாத் சிங்.