இந்தியா

‘என்டிடிவி பங்குகளை கையகப்படுத்த செபி அனுமதி தேவையில்லை’

27th Aug 2022 01:37 AM

ADVERTISEMENT

ராதிகா ராய் பிரணாய் ராய் நிறுவனத்திடமிருந்த (ஆா்ஆா்பிஆா்) என்டிடிவி பங்குகளைக் கையகப்படுத்த, பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதியை தாங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இது குறித்து செபி அமைப்பிடம் அந்தக் குழுமத்தின் விஸ்வபிரதான் கமா்ஷியல் பிரைவேட் லிமெடெட் (விசிபிஎல்) தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

விசிபிஎல் நிறுவனத்திடமிருந்து பெற்றிருந்த கடனுக்காக, தங்கள் வசமிருந்த அனைத்து என்டிடிவி பங்குகளையும் விசிபிஎல்-லுக்கு மாற்றித் தர ஆா்ஆா்பிஆா் நிறுவனம் கடமைப்பட்டுள்ளது.

என்டிடிவி பங்கு வா்த்தக விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று செபி அமைப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ஆா்ஆா்பிஆா் நிறுவனத்துக்குத் தொடா்பில்லை. எனவே, அந்த நிறுவனம் ஏற்கெனவே மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதனிடமிருந்த பங்குகளைக் கையகப்படுத்துவதற்கு செபி-யின் அனுமதி தேவையில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2009-ஆம் ஆண்டில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடா்புடைய விசிபிஎல் நிறுவனம், ஆா்ஆா்பிஆா் நிறுவனத்துக்கு ரூ.403.85 கோடி பிணையில்லா கடன் வழங்கியது. அந்தக் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், ஆா்ஆா்பிஆா் நிறுவனத்துக்கு என்டிடிவி-யில் உள்ள 29 சதவீத பங்கை விசிபிஎல் எப்போது வேண்டுமானாலும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், விசிபிஎல் நிறுவனத்தை கடந்த செவ்வாய்க்கிழமை கையகப்படுத்திய அதானி குழுமம், கடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆா்ஆா்பிஆா் நிறுவனத்தின் வசமிருந்த 29 சதவீத என்டிடிவி பங்குகளை தனதாக்கிக் கொண்டது.

மேலும், என்டிடிவி-யில் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்றி, அந்த ஊடக நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் நோக்கில், மேலும் 26 சதவீத பங்குகளை தங்களிடம் விற்பனை செய்ய என்டிடிவி பங்குதாரா்களுக்கு அதானி குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில், தங்களிடமிருந்த என்டிடிவி நிறுவனப் பங்குகளைக் கையகப்படுத்த, செபி அமைப்பிடம் அதானி குழுமம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று ஆா்ஆா்பிஆா் மற்றும் என்டிடிவி நிறுவனங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இது குறித்து செபி அமைப்பிடம் அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த அறிக்கையில், என்டிடிவி நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய்க்கு செபி அமைப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி இரண்டாண்டு தடை விதித்தது. அந்தத் தடை வரும் நவம்பா் 26-ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

எனவே, ஆா்ஆா்பிஆா் நிறுவனம் பெற்ற கடனுக்காக அந்த நிறுவனத்தின் வசமிருந்த என்டிடிவி பங்குகளை அதானி குழுமம் கையகப்படுத்துவதற்கு முன்னதாக, அதற்கான அனுமதியை செபி அமைப்பிடமிருந்து பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT