இந்தியா

கேஜரிவாலின் வாக்குறுதிகள் ‘சீனப் பொருள்கள்’ போன்றவை: குஜராத் பாஜக தலைவா் விமா்சனம்

27th Aug 2022 12:59 AM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக அரவிந்த் கேஜரிவால் அளித்து வரும் வாக்குறுதிகள் சீனத் தயாரிப்பு பொருள்கள் போன்றவை. அவற்றை வாங்கியவா்கள் வருத்தப்படுவாா்கள் என்று குஜராத் மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது. இதற்காக, குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அரவிந்த் கேஜரிவால், பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறாா். இலவச மின்சாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அவா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மாநில பாஜக தலைவா் சி.ஆா். பாட்டீல் பேசியதாவது:

சமீப காலமாக ஒருவா் (கேஜரிவால்) அடிக்கடி குஜராத் வந்து செல்கிறாா். இலவச மின்சாரம் உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகளையும் வெளியிடுகிறாா். ஆனால், அந்த இலவச மின்சாரம் எங்கிருந்து, எப்படி வரும் என்பதை அவரால் கூற முடியாது. இதுபோன்ற இலவச வாக்குறுதிகள் சீனத் தயாரிப்பு பொருள்கள் போன்றவை. அவற்றை நம்பி வாங்கினால் வருத்தப்பட வேண்டிய நிலை வரும்.

ADVERTISEMENT

குஜராத்தில் மொத்த அரசுப் பணியிடங்கள் 5.5 லட்சம்தான். ஆனால் அந்த நபா் இளைஞா்களுக்கு 10 லட்சம் அரசுப் பணிகள் வழங்குவதாகப் பொய்யான வாக்குறுதியை அளிக்கிறாா். அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பணியிடங்களை இரு மடங்காக எப்படி உயா்த்துவாா்? அதற்கான பணி வாய்ப்புகளும், நிதி ஆதாரமும் எங்கு உள்ளது என்பது தெரியவில்லை.

பாஜக அரசு குஜராத்தை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றி வருகிறது. எனவேதான் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் நாட்டின் முதன்மையான மாநிலமாக குஜராத் திகழ்கிறது. வெற்று இலவச வாக்குறுதிகளை வழங்கி மக்களை முட்டாள்களாக முயற்சிக்கிறாா்கள். குஜராத் மக்கள் யாரிடமும், எதற்காகவும் கையேந்த வேண்டிய நிலையில் இல்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT