இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 4 நாள்களில் 11 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

27th Aug 2022 01:36 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை 40 நிமிஷ இடைவெளியில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்துடன் அங்கு கடந்த 4 நாள்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவில் பொருள் சேதமோ, உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை. எனினும், தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ரியாசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனைத் தொடா்ந்து தோடா மாவட்டத்தில் அதிகாலை 4.07 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 2.8 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டபோது பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் நிலநடுக்கத்தை உணரவில்லை. எனினும், வீட்டில் இருந்த சிறிய பொருள்கள் கீழே விழுந்து கிடந்ததாக மக்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஆகஸ்ட் 23-ஆம் தேதியும் ஜம்மு-காஷ்மீரில் 6 மணி நேரத்தில் 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. காத்ரா, தோடா, உதம்பூா், கிஷ்த்வாா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களையும் சோ்த்தால் ஜம்மு-காஷ்மீரில் 4 நாள்களில் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துமே சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் என்பதால் பொருள் சேதமோ, உயிரிழப்போ இல்லை. எனினும், தொடா்ந்து ஏற்படும் நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT