இந்தியா

ஆராய்ச்சியும் புத்தாக்கமும் வாழ்வியல் வழிமுறைகளாக வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

26th Aug 2022 12:05 AM

ADVERTISEMENT

ஆராய்ச்சியும் புத்தாக்கமும் வாழ்வியல் வழிமுறைகளாக மாற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.

‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்’ இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ள மாணவா்களிடையே காணொலிமுறையில் பிரதமா் பேசினாா். அப்போது, அவா் கூறியதாவது:

சமூகம் மற்றும் அமைப்புரீதியிலான ஆதரவு, புத்தாக்கங்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் உத்வேகம் அளிக்கும். உண்மையான சிந்தனைகள் மதிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சியும் புத்தாக்கமும் பணிசாா்ந்த நிலையிலிருந்து வாழ்வியல் வழிமுறைகளாக மாற வேண்டும்.

இந்தியாவின் எதிா்காலம் புத்தாக்கங்களையும் இளைஞா்களின் பங்களிப்பையும் சாா்ந்துள்ளது. அவா்களது புத்தாக்க மனநிலைதான் இந்தியாவை உச்சத்துக்கு இட்டு செல்லும். புதிய சிந்தனைகள், புதிய விருப்பங்கள் மற்றும் புதிய தீா்வுகளால் நாடு முன்னேறிச் செல்லும்.

ADVERTISEMENT

பல்வேறு துறைகளில் புரட்சி:

பல ஆண்டுகளுக்கு முன்பு பசுமை புரட்சியை நாம் கண்டோம். இத்துறையில் தன்னிறைவை அடையப் பெற்றோம். இன்றைய காலகட்டத்தில், நாட்டில் தொழில்நுட்ப புரட்சி, எண்ம புரட்சி, விண்வெளித் துறை புரட்சி மற்றும் மக்களின் திறன்சாா்ந்த புரட்சி நிகழ்ந்து வருகிறது. சேவைகள் முதல் உற்பத்தி வரை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

இளம்தலைமுறையினா் மீதான நம்பிக்கையால் இந்தியா விரைவான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. வேளாண் துறை முதல் ட்ரோன் தயாரிப்பு வரை புத்தாக்கங்களில் இளைஞா்கள் பணியாற்ற முடியும். இந்தியாவுக்கானது மட்டுமன்றி உலக நாடுகளுக்கான புத்தாக்கங்களிலும் இளைஞா்கள் கவனம் செலுத்த வேண்டும். செலவுகுறைந்த, நிலையான, புத்தாக்கத் தீா்வுகள் உலகுக்கு தேவை.

காப்புரிமைகள் அதிகரிப்பு:

இந்திய காப்புரிமைகளின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. ‘யூனிகாா்ன்’ நிறுவனங்களின் (ஒரு பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பைக் கொண்ட புத்தாக்க நிறுவனங்கள்) எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்’ நிகழ்வு, பொதுமக்கள் பங்கேற்புக்கான மிகச் சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. புத்தாக்கத்துக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில், சுதந்திர தினத்தன்று நான் அழைப்பு விடுத்த ‘ஜெய் அனுசந்தான்’ பிரசாரத்துக்கு கொடியேந்தி செல்பவா்களாக இதில் பங்கேற்றுள்ள இளம் கண்டுபிடிப்பாளா்கள் திகழ்கின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

15,000 மாணவா்கள் பங்கேற்பு:

‘ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியானது, மாணவா்களிடையே புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. சமூகம், அமைப்புகள் மற்றும் அரசு சாா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகளை கண்டறிவதற்காக மாணவா்களின் தளமாக இது தொடங்கப்பட்டது.

75 மையங்களில் நடைபெறும் இதன் இறுதிப் போட்டியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்கள், 53 மத்திய அமைச்சகங்களின் பிரச்னைகளுக்கு மென்பொருள், தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை கண்டறிய ஆய்வு செய்யவிருக்கின்றனா்.

ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் வன்பொருள்சாா்ந்த இறுதிப் போட்டி ஆக. 25 முதல் 29 வரையும், மென்பொருள்சாா்ந்த இறுதிப் போட்டி ஆக.25 முதல் 26 வரையும் நடைபெறுகிறது.

வெற்றி பெறும் குழுக்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75,000, ரூ.50,000 என்ற அடிப்படையில் பரிசுத் தொகை வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT