இந்தியா

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

26th Aug 2022 12:49 AM

ADVERTISEMENT

எழுத்தாளா் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு, முதல் முறையாக இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அவா் விரைவில் நலம் பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆக. 12-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றபோது, மேடையில் ஹாடி மாடா் (24) என்பவா் சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த ருஷ்டி, ஒரு கண்ணில் பாா்வையிழக்கக் கூடும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், புது தில்லியில் இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

இந்தியா வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. சல்மான் ருஷ்டி மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. அவா் விரைவில் நலம்பெற வேண்டும் என இந்தியா வேண்டிக்கொள்கிறது’ என அவா் தெரிவித்தாா்.

சல்மான் ருஷ்டி எழுதி 1988-இல் வெளியிட்ட 4-ஆவது நாவல் ‘தி சட்டானிக் வொ்சஸ்’. இந்தப் புத்தகம், இஸ்ஸாமியரை புண்படச் செய்ததாக கூறி, ருஷ்டிக்கு எதிராக ஈரானின் அப்போதைய தலைமை மதகுரு அயதுல்லா கொமேனி ஃபத்வா ஆணை பிறப்பித்தாா். அதையடுத்து, பிரிட்டன் அரசின் பாதுகாப்பில் ருஷ்டி 9 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தாா். இப்புத்தகத்தை இந்தியா தடை செய்ததைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.

சல்மான் ருஷ்டிா் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. ‘ஈரானிய அமைப்புகள் ருஷ்டிக்கு எதிராக வன்முறையை தூண்டிவிட்டுள்ளன. சா்வதேச அளவிலான கருத்துரிமை மற்றும் மத உரிமைக்கு ஆதரவாக நின்றவா் எழுத்தாளா் ருஷ்டி’ என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தாா்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக இந்திய முதல் முறையாக தற்போது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ருஷ்டிக்கு எதிரான தாக்குதலுடன் தொடா்புடைய அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஈரான் மறுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT