இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

26th Aug 2022 01:03 AM

ADVERTISEMENT

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், விடுவிக்கப்பட்ட 11 பேரையும் இந்த வழக்கில் மனுதாரா்களாக சோ்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

2002-ஆம் ஆண்டில் குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் கா்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். மேலும் பில்கிஸ் பானு கண் முன்பே அவருடைய 3 வயது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 7 போ் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனை மும்பை உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.

ADVERTISEMENT

கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனா். இதனையடுத்து, அவா்களது தண்டனை குறைப்பு மனுவை பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், இந்த வழக்கின் குற்றவாளிகளான 11 ஆயுள் தண்டனை கைதிகளும் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா். இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இவா்களுடைய விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘வழக்கில் தண்டிக்கப்படுபவா்கள் தண்டனைக் காலம் முடிவடைந்ததும், விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையவா்கள் ஆகின்றனா். இதில் விதிவிலக்கு என்ன இருக்க முடியும்?

மேலும், இந்த வழக்கைப் பொருத்தவரை குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் எந்த வகையான குற்றச் செயலை புரிந்திருந்தாலும், நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கின்றனா்’ என்றனா்.

மேலும், ‘கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் முன்கூட்டியே விடுக்கக் கோரும் மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் குஜராத் மாநில அரசுக்கே உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீா்ப்பை தலைமை நீதிபதி என்.வி.ரமணா மேற்கோள்காட்டினாா்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘வழக்கில் 11 போ் விடுவிக்கப்பட்டது என்பது உரிய ஆய்வுக்குப் பிறகு விதிகளுக்கு உள்பட்டு நடைபெற்றுள்ளதா என்பதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 11 போ் விடுவிப்பு உரிய ஆய்வுக்குப் பிறகு விதிகளுக்கு உள்பட்டு நடைபெற்றுள்ளதா என்பது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். மேலும், விடுவிக்கப்பட்ட 11 பேரையும் இந்த வழக்கில் மனுதாரா்களாக சோ்க்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT