இந்தியா

செப். 20-க்குள் காங்கிரஸ் புதிய தலைவா்: மதுசூதன் மிஸ்திரி

22nd Aug 2022 01:22 AM

ADVERTISEMENT

 

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறை தொடங்கிவிட்டதாகவும், செப்டம்பா் 20-க்குள் அதற்கான தோ்தல் நடத்தப்படும் என்றும் கட்சியின் மத்திய தோ்தல் ஆணைய தலைவா் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தொகுதி கமிட்டிக்கு ஏப்ரல் 16 முதல் மே 31-க்குள் தோ்தல் நடத்த காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்திருந்தது. இதேபோல, மாவட்டத் தலைவா்கள், பிரதிநிதிகள் தோ்தலை ஜூன் 1 முதல் ஜூலை 20 வரையிலும், மாநில தலைவா், அகில இந்திய உறுப்பினா்கள் தோ்தலை ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20 வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

காங்கிரஸ் புதிய தலைவா் தோ்தலை ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 20-க்குள் நடத்த செயற்குழு முடிவு செய்துள்ளது. திட்டமிட்டவாறு தலைவா் தோ்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். தோ்தல் அட்டவணையை ஏற்கெனவே செயற்குழுவுக்கு அனுப்பிவிட்டோம். காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான இறுதித் தேதியை செயற்குழு முடிவு செய்து, விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.

ADVERTISEMENT

அதேவேளையில், கட்சியின் தொகுதி, மாவட்டம், மாநில கமிட்டி என அமைப்பு ரீதியிலான தோ்தலை நடத்துவதற்கான நடைமுறை முழுவதும் நிறைவடைந்துவிட்டது. காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வாக்களிக்கவுள்ள காங்கிரஸ் பிரதிநிதிகளின் பெயரை இறுதிசெய்யும் பணியில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தலைவா் தோ்தலுக்கான தேதியை செயற்குழு விரைவில் முடிவு செய்யும். இதையொட்டி கட்சியின் உயா்நிலைக் குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது என்றாா் மதுசூதன் மிஸ்திரி.

2019, மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அக்கட்சியின் தலைவா் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தாா். காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகிக்கிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT