இந்தியா

மும்பைக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

21st Aug 2022 08:28 AM

ADVERTISEMENT

‘மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைப் போல மீண்டும் தாக்குதல் நடத்தி மும்பை நகரைத் தகா்ப்போம்’ என்று காவல் துறையினருக்கு பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் வந்துள்ளது.

மும்பை காவல் துறையினரின் போக்குவரத்துப் பிரிவு உதவி எண்ணுக்கு ‘வாட்ஸ்ஆப்’ மூலம் இந்த மிரட்டல் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடலோரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினா் அதிகரித்துள்ளனா்.

மும்பை போக்குவரத்துக் காவல் பிரிவின் உதவி மையத்தின் கட்டுப்பாட்டு அறை வோா்லியில் உள்ளது. அங்குள்ள கைப்பேசியின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு தகவல் வந்தது. அதில், ‘மும்பையில் 6 போ் கொண்ட குழுவை வைத்து தாக்குதல் நடத்தப்படும். மும்பையைத் தகா்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை உடனடியாகக் தீவிர கவனத்தில் கொண்ட காவல் துறையினா், அச்சுறுத்தல் செய்தி வந்த எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினா். பாகிஸ்தானில் உள்ள கைப்பேசி எண்ணில் இருந்து அந்தச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது தொடா்பாக மும்பை காவல் துறை ஆணையா் விவேக் பன்சால்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த மிரட்டல் தகவல் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டது, முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த மிரட்டலை காவல் துறை தீவிரமாக கருத்தில்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடா்பாக விசாரணை தொடா்கிறது. கடலோரங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடலோரக் காவல் படையுடன் இணைந்து மும்பை காவல் துறை களமிறங்கியுள்ளது’ என்றாா்.

மாநில எதிா்க்கட்சித் தலைவா் அஜித் பவாா் இது தொடா்பாக கூறுகையில், ‘காவல் துறையினா் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய புலனாய்வு அமைப்புகளும் இது தொடா்பாக விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

மும்பை தாக்குதல்: கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சோ்ந்த 10 லஷ்கா் பயங்கரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் புகுந்தனா். ரயில் நிலையம், ‘தாஜ்’ ஹோட்டல் என மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அவா்கள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

9 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரின் பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்டனா். உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப், விசாரணைக்குப் பிறகு 2012-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டாா்.

கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் கடல் பகுதியில் மூன்று ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு கரை ஒதுங்கியது.

அப்படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்குச் சொந்தமானது. மஸ்கட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு அப்பெண்ணும் அவரது கணவரும் கடந்த ஜூன் மாதம் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுக்கடலில் மோசமான வானிலையால் என்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து, படகை கைவிட்டனா். அந்தப் படகு, ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கியிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்தது. இந்தப் படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென மாநில அரசு விளக்கமளித்தது.

ராய்கட்டில் இருந்து மும்பை சுமாா் 100 கி.மீ. தொலைவில் உள்ளது. படகு சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாளிலேயே மும்பையைக் குறிவைத்து மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mumbai
ADVERTISEMENT
ADVERTISEMENT