இந்தியா

18 லட்சம் மக்களின் ஒரே தீர்வான உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

19th Aug 2022 01:12 PM

ADVERTISEMENT


பென்னாகரம்: 18 லட்சம் மக்களின் ஒரே தீர்வான உபரி நீர் திட்டத்தை நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக சார்பில் தருமபுரி காவிரி உபரணித் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பிரசார எழுச்சி நடை பயணம் தருமபுரி மாவட்டத்தில் மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் நடைபெற்ற எழுச்சி பிரசார நடை பயணத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு, ஒகேனக்கல்லில் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் திட்ட வடிகால் வாரிய நிலையத்தில் இருந்தபடி காவிரி ஆற்றினை பார்வையிட்டர். 

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மூன்று நாள்கள் தருமபுரி மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, வேளாண்மை, தொழில் வளம்,குடிநீர் பிரச்னை, நிலத்தடி நீரில் புளோரோசிஸ் நச்சுப்பொருள் கலப்பால் உடல்நலம் மனநல பாதிப்பு, மூன்றிலிருந்து ஐந்து லட்சம் பேர் வேலை தேடி வெளி மாவட்டத்திற்கு செல்லுகிறார்கள். இந்த அனைத்து பிரசனைகளுக்கும் ஒரே தீர்வு காவிரியில் ஓடுகின்ற உபரி நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், அணைகளில் நிரப்புவது தான் தீர்வாகும். 

தருமபுரி மாவட்டத்தின் வடக்கே எல்லையிலே தென்பெண்ணை ஆறும், மேற்கு எல்லையில் காவிரி ஆறும் ஓடுகிறது. கர்நாடகத்தில் உருவாகும் காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தில் நுழைகிறது. காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்று நீரால் தருமபுரி மாவட்டத்திற்கு எவ்வித பயனும் கிடையாது. ஆண்டிற்கு 20 அல்லது 25 நாள்கள் காவிரியில் வீணாக கடலில் கலக்கிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்கலாம் | நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடலில் கலக்கும் உபரி நீரில் இருந்து 3 டிஎம்சி தண்ணீரை, நீரேற்று நிலையத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களில் அணைகளின் நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரின் அளவு 700 அடியில் இருந்து 1000 அடிக்கு கீழ் சென்றுள்ளது. உபரி நீரை 3 ஆண்டுகளுக்கு மேல்  ஏரி, குளங்களை நிரப்புவதன் மூலம் மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கே வந்துவிடும். 

நிகழாண்டில் காவிரி ஆற்றில் இருந்து உபரி நீர் அதிக அளவில் கடலில் கலந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் நொடிக்கு இரண்டரை லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 35 நாள்களில் 161 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்திற்கு கேட்பது வெறும் 3 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இந்த ஆண்டு இறுதியில் காவிரி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரின் அளவு 200 டி. எம்.சி. மேல் இருக்கும். 

தற்போது தென்மேற்கு பருவமழை பெய்தும், அடுத்தது வடகிழக்கு பருவமழை வர உள்ளது. இந்த மாவட்டத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வான உபரி நீர் திட்டத்திற்கு 700 முதல் 800 கோடி வரை நீதி தேவைப்படுகிறது. இது தமிழக அரசிற்கு ஒரு பெரும் நிதிச்சுமை இல்லை. உபரி நீர் திட்டம் நிறைவேற்றக் கோரி முதலில் கோரிக்கை வைத்தது பாமக தான். அதன் பிறகு பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் அழைத்து பேரணி, 10 லட்சம் கையெழுத்து இயக்கம் மூலம் 10 லட்சம் கையெழுத்தினை பெற்று அப்போதைய  முதல்வராக இருந்த எடப்பாடி. பழனிசாமியிடம் கொடுத்து திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வலியுறுத்தினோம். 

தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி.

தேர்தல் நேரத்தில் உபநீர் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட பின்னர் அவரை சென்று பார்த்த போது போதிய நிதி இல்லை என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலிடம் 18 லட்சம் மக்களின் தீர்வான உபர் நீர் திட்டம் நிறைவேற்ற கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் எந்த தகவலும் வரவில்லை. 

அதனால் இரண்டாம் கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் மூன்று நாள் நடைபயணமாக அனைத்து கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றுவது தான் நடை பயணத்தின் நோக்கம். இதில் எவ்வித அரசியல் கிடையாது. காவிரி உபரி நீர் திட்டத்தை அனைத்து கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். 

பாமக சார்பில் காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்தும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது .

தருமபுரி மாவட்டத்தின் உயிர்நாடி பிரச்சனையான உபரணித் திட்டத்தினை நிறைவேற்றும் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம், நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களின் மூலம் அழுத்தம் கொடுத்து திட்டம் நிறைவேறும் வரை பாமக ஓயாது. 

தருமபுரி மாவட்டத்தின் உயிர்நாடி பிரச்னையான உபரி நீர் திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து  தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். உபரி நீர் திட்டம் குறித்து கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ஆய்வு நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. உபரி நீர் திட்டம் செயல்படுத்துவதன் மூலம் டெல்டா விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உபரிநீர் திட்டத்தை உடனடியாக  நிறைவேற்றாவிடில்  பாமகவை அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவதற்கு தள்ள வேண்டாம் என அன்புமணி கூறினார். 

இந்த நடை பயணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்) எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி), அருள் (சேலம் மேற்கு) சதாசிவம் ( மேட்டூர்), தருமபுரி முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில், இளைஞர் சங்க மாநில நிர்வாகி சத்தியமூர்த்தி, மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் மந்திரி படையாச்சி, விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT