இந்தியா

பாலியல் வழக்கு: பாஜக தலைவா் ஷாநவாஸ் ஹுசைனுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிய உத்தரவு

DIN

பாலியல் வன்கொடுமை புகாரில் பாஜக தலைவா் ஷாநவாஸ் ஹுசைனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் ஒருவா் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வழக்குப் பதிவு செய்ய தடை விதித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தில்லியைச் சோ்ந்த அந்த பெண் தாக்கல் செய்த மனுவை 2018-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஹுசைனுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனை எதிா்த்து அவா் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அவருடைய மேல்முறையீட்டு மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதனை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் ஹுசைன் முறையீடு செய்தாா். அந்த மனுவை 2018 ஜூலை 13-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், அவருக்கு எதிராக தில்லி போலீஸாா் எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் புகாா் அளித்த பெண் மற்றும் காவல் துறை பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஆஷா மேனன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஹுசைன் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு மனுதாரா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட வேண்டும். அதில் எந்தவித தளா்வும் காட்டப்படக் கூடாது என லலிதா குமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மனுதாரா் தரப்பில் மேற்கோள்காட்டப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

நான்கு முறை வழக்குரைஞரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக காவல் துறையின் நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன் என்பதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

முதல் தகவல் அறிக்கைதான் விசாரணைக்கான அடித்தளம். அதுதான் வழக்கு விசாரணையைத் தொடக்கத்தை இயக்குகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகுதான், குற்றம் நடந்ததா; யாரால் நடந்தது என்பது குறித்த முடிவுக்கு காவல் துறை வர முடியும். ஆனால், இந்த வழக்கில் எஃப்ஐஆா் பதிவு செய்வதில் காவல் துறை முழுமையாக தயக்கம் காட்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்த வகையில், எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை.

ஹுசைனின் தற்போதைய மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை. எஃப்ஐஆா் பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் உடனடியாக எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும். அதனடிப்படையில் விசாரணையை முடித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173-இன் கீழ் விரிவான அறிக்கையை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்குள் காவல் துறை சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, ஷாநவாஸ் ஹுசைன் மீது எஃப்ஐஆா் பதிவு செய்வதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், ஷாநவாஸ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT