இந்தியா

கடந்த 3 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் வசதி: பிரதமர் மோடி

DIN

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்பைப் பெற்றுள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இதுவரை 10 கோடி குடும்பங்கள் குடிநீர் குழாய் இணைப்பைப் பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். கோவாவில் கிராமப்புறங்கள் 100 சதவிகிதம் குடிநீர் இணைப்பப் பெற்றுள்ளன. அதன் காரணமாக அந்த மாநில அரசால் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அதில் அவர் பேசியதாவது: “ நீர் பாதுகாப்பு என்பது உலக அளவில் அனைத்து நாடுகளும் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்னை. இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதற்கு குடிநீர் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக மாறப் போகிறது. நாட்டின் தற்போதைய நிலை குறித்தும் மற்றும் அதன் எதிர்கால நிலை குறித்தும் சிலருக்கு கவலை இல்லை.ஆனால், அவர்கள் நீர் பாதுகாப்பு குறித்து மட்டும் பேசுவார்கள். நீர் பாதுகாப்பிற்காக ஒரு போதும் எந்த ஒரு முயற்சியும் எடுக்க மாட்டார்கள். 


இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கிராமப்புறங்களில் வெறும் 3 கோடி குடும்பங்களுக்கே குடிநீர் வசதி கிடைத்துள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் எங்களது அரசு 7 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்கியுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு 10 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பை வழங்கி சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் இந்த சாதனை நீர் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் அரசு கொண்டுள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. ஜல் ஜீவன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது 16 கோடி கிராமப்புற குடும்பங்கள் தங்களது குடிநீர் தேவைக்கு பல்வேறு நீர் ஆதாரங்களை நம்பி இருந்தன. நாங்கள் அவர்களின் துயரங்களை போக்கியுள்ளோம்.

வீடு தோறும் குடிநீர் வழங்கும் இந்த ஜல் ஜீவன் திட்டத்தில் நான்கு முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவை, மக்களின் ஈடுபாடு, பங்குதாரர்களின் ஒத்துழைப்பு , திட்டத்தினை செயல்படுத்தும் அரசியல் மன வலிமை மற்றும் போதுமான அளவில் வளங்களை பயன்படுத்துதல் ஆகியவை ஆகும். நாடு மூன்று முக்கிய சாதனைகளை எட்டியுள்ளது. அதில், இந்த 10 கோடி குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்பும் ஒன்று. ஏற்கனவே தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ 100 சதவிகித குடிநீர் இணைப்பை வழங்கியுள்ள நிலையில் அவற்றுடன் தற்போது கோவாவும் இணைகிறது. கோவாவைத் தொடர்ந்து இன்னும் பல மாநிலங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடிக்க உள்ளன.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் ஐம்பெரும் விழா

கோவில்பட்டி கோயிலில் திருக்குறிப்புத் தொண்டா் அபிஷேக விழா

சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

நீரில் மூழ்கி தொழிலாளி மரணம்

அப்பா் சிலை பிரதிஷ்டை

SCROLL FOR NEXT