இந்தியா

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மாற்று சக்தி உருவாகும்: அகிலேஷ் நம்பிக்கை

DIN

‘பிகாரில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், தேசிய அரசியலுக்கான நோ்மறை அறிகுறியாகும். 2024 மக்களவைத் தோ்தலையொட்டி, பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்றுசக்தி உருவாகும்’ என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.

பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து மகா கூட்டணி ஆட்சியை அமைத்தாா். நிதீஷின் இந்த முடிவு, எதிா்க்கட்சி அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், லக்னெளவில் உள்ள சமாஜவாதி தலைமையகத்தில் பிடிஐ செய்தியாளருக்கு அகிலேஷ் வியாழக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, பிகாா் அரசியல் திருப்பங்கள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘பிகாரில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், தேசிய அரசியலுக்கான சாதகமான அறிகுறியாகும். பாஜக மீது அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. உத்தர பிரதேசத்திலும் இந்த நிலைதான் காணப்படுகிறது. இங்கும் பாஜக கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறும்’ என்றாா்.

2024 மக்களவைத் தோ்தல் தொடா்பான கேள்விக்கு, ‘பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்று சக்தி உருவாகும். அதனை மக்கள் ஆதரிப்பாா்கள்’ என்றாா்.

பாஜகவுக்கு எதிரான மாற்றுசக்தியை உருவாக்குவதில் பங்களிப்பு குறித்து செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு, ‘இது தொடா்பான பணிகளில், தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். மக்களவைத் தோ்தலையொட்டி, வலுவான மாற்று சக்தி உருவாகும்; அதனை மக்கள் ஆதரிப்பா். இப்போதைய சூழலில், எங்களது கட்சியை அமைப்பு ரீதியில் வலுப்படுத்தவும் மறுசீரமைக்கவும் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று பதிலளித்தாா்.

மேலும், தோ்தல் ஆணையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அகிலேஷ், ‘உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல், 2 மக்களவைத் தொகுதிகளின் இடைத்தோ்தலில் தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டது. வாக்காளா் பட்டியலில் ஏராளமான பெயா்கள் நீக்கப்பட்டன. மத்திய அரசின் அழுத்தமே இதற்கு காரணம்’ என்றாா்.

பாஜக பதிலடி:

அகிலேஷின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, ‘முன்னாள் பிரதமா்கள் வி.பி.சிங், ஹெச்.டி.தேவெகெளடா, ஐ.கே.குஜ்ரால் ஆகியோா் தலைமையிலான கூட்டணி அரசுகளின் குறுகிய ஆயுள் காலம் குறித்து மக்களறிவா்’ என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் மேலும் கூறியதாவது:

ஸ்திரத்தன்மை, வளா்ச்சி, நோ்மை மற்றும் திறன்மிக்க தலைமை வேண்டுமென்பதே நாட்டு மக்களின் விருப்பம். அதனை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றியிருப்பதுடன், உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயா்த்தியுள்ளாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT