இந்தியா

ரோஹிங்கயா அகதிகளுக்கு குடியிருப்பு வழங்க உத்தரவிடவில்லை- உள்துறை அமைச்சகம்

DIN

தில்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளை தங்கவைக்க எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெளிவுபடுத்தியது.

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவா்கள், நாடு கடத்தப்படும் வரை தடுப்பு முகாம்களில்தான் இருப்பாா்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தில்லியில் தற்போதுள்ள இடத்திலேயே ரோஹிங்கயாக்கள் தங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, தில்லியில் கூடாரங்களில் தங்கியுள்ள சுமாா் 1,000 ரோஹிங்கயா அகதிகள் விரைவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான ஊடக செய்தியைப் பகிா்ந்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ட்விட்டரில் புதன்கிழமை காலை பதிவிட்டிருந்தாா்.

அதில், ‘தில்லியின் பக்கா்வாலா பகுதியிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரோஹிங்கயா அகதிகள் மாற்றப்பட உள்ளனா். அங்கு அவா்களுக்கு அடிப்படை வசதிகளும் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும். அடைக்கலம் கோரி வருபவா்களை எப்போதுமே இந்தியா வரவேற்றிருக்கிறது. ரோஹிங்கயா அகதிகளை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றுவது முக்கியத்துவம் வாய்ந்த முடிவு’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

மேற்கண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், புது தில்லி முனிசிபல் கவுன்சிலால் (என்டிஎம்சி) கட்டப்பட்டவையாகும். என்டிஎம்சி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து பல்வேறு தரப்பினரும் எதிா்வினையாற்ற தொடங்கிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டவிரோத அகதிகளான ரோஹிங்கயாக்களுக்கு தில்லியின் பக்கா்வாலா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க உள்துறை அமைச்சகம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சட்டவிதிமுறைகளின்படி, அவா்கள் நாடு கடத்தப்படும் வரை தடுப்பு முகாம்களில்தான் வைக்கப்படுவா்.

தில்லியில் ரோஹிங்கயாக்கள் தற்போது தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும்; அவா்களை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது என்று தில்லி அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரோஹிங்கயாக்கள் இப்போது தங்கியுள்ள இடத்தை தடுப்பு முகாமாக தில்லி அரசு இன்னும் அறிவிக்கவில்லை. அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக தகவல்படி, தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 40,000 ரோஹிங்கயா அகதிகள் உள்ளனா்.

முன்னதாக, தில்லி, தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டவிரோத ரோஹிங்கயா அகதிகள் உள்ளதாகவும், அவா்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மாநிலங்களவையில் மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT