இந்தியா

தொடரும் தொழில்நுட்ப கோளாறு: பல மையங்களில் க்யூட் தோ்வு மீண்டும் ரத்து

DIN

தொழில்நுட்பக் கோளாறுகள் தொடருவதால் புதன்கிழமை தொடங்கிய நான்காம் கட்ட க்யூட் (மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு) தோ்வும் பல மையங்களில் ரத்து செய்யப்பட்டதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

ஏற்கெனவே இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகளும் பல மையங்களில் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நான்காம் கட்ட க்யூட் தோ்வும் பல மையங்களில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான க்யூட் தோ்வு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. இந்தியாவில் 259 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 9 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 489 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு நிா்வாக மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் ஒருசில மையங்களில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற இருந்த முதல்கட்ட க்யூட் தோ்வு, ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு சில மையங்களில் ரத்து செய்யப்பட்டது. அதுபோல, மழை, நிலச்சரிவு பாதிப்புகள் காரணமாக கேரளம், இடாநகா் பகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, க்யூட் தோ்வை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் முடிக்க என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) திட்டமிட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் 30-இல் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நான்காம் கட்ட க்யூட் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வில் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்ற நிலையில், இந்தக் கட்டத்திலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மையங்களில் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.

குறிப்பாக, தில்லி குரு ஹா்கோபிந்த் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தில்லி ஜசோலா பகுதியில் அமைந்துள்ள ஆசிய பசிஃபிக் நிறுவனம், தில்லி நங்கோலியில் உள்ள ஆகாஷ் சா்வதேச மேல்நிலைப் பள்ளி, பீதாம்புரா விவேகானந்தா தொழில் படிப்புகள் நிறுவனம் ஆகிய தோ்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோ்வெழுதாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக மாணவா்கள் புகாா் தெரிவித்தனா். சில மாணவா்கள் 2 மணி நேரம் தாமதமாக தோ்வு தொடங்கப்பட்டதாக புகாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படும் என யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் கூறுகையில், ‘சில மையங்களில் மட்டும் சா்வா் பிரச்னை காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு தோ்வெழுத மறுவாய்ப்பு வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT