இந்தியா

ரூ.2,493 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை: பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

18th Aug 2022 03:04 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

தில்லி வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தார். அப்போது ரூ.2,493 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
 இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, பிரதமரிடம் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப் போவதாக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் புதன்கிழமை மாலையில் ஸ்டாலின் சந்தித்தார்.
 பிரதமருக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கியதோடு, பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட தமிழக மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தையும் ஸ்டாலின் வழங்கினார்.
 பின்னர் முதல்வரும் பிரதமரும் சில நிமிஷங்கள் கலந்துரையாடினர். அதில் 44 -ஆவது ஒலிம்பியாட் போட்டிகளை தொடக்கிவைத்ததற்கு நன்றி தெரிவித்தும், அந்தப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
 நீதி ஆயோக் கூட்டத்துக்கு வரமுடியாத நிலை குறித்தும் முதல்வர் பேசினார் என்று கூறப்பட்டது. மேலும், முதல்வர் ஏற்கெனவே அளித்த கோரிக்கைகள் குறித்து பேசியதோடு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதிகளை விரைவாக வழங்குமாறு கோரினார்.
 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளோடு, ரூ.2,493 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தமிழகத்துக்கு விரைவாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
 தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் பருவமழை தொடங்கும்போது தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு தேவையான பேரிடர் நிவாரண நிதியை விரைவாக விடுவிக்கவும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
 பிரதமரை முதல்வர் சந்திக்கச் சென்றபோது நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோர் உடன் சென்றனர்.
 பிரதமரைச் சந்திப்பதற்கு முன்னதாக பிற்பகலில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு விழாக்களுக்கு அழைப்பு வந்தது. வரமுடியாத சூழ்நிலையில் இருவரையும் சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்.
 முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று முறை பிரதமரை சந்தித்து தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தேன். அந்த கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்படக் கூடிய சூழ்நிலையில் இருந்தாலும், இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன. அதையும் நினைவூட்டி, அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமரை கேட்டுக் கொள்வேன்.
 குறிப்பாக நீட் பிரச்னை, தேசிய கல்விக் கொள்கை, மின்சார சட்டத்திருத்தம், காவிரி, மேக்கேதாட்டு அணை தொடர்பான கோரிக்கைகளை மீண்டும் பிரதமரிடம் நினைவுபடுத்துவேன் என்றார் அவர்.
 இலவச மடிக்கணினி திட்டம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய முதல்வர், "அதுபோன்ற அரசியல் தொடர்பான கேள்விக்கு இங்கே பதில் கூற முடியாது' என தெரிவித்தார்.
 பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கிய தமிழக மரபு தானியங்கள் அடங்கிய தொகுப்பு பெட்டகத்தில் மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், கருப்புக்கவுனி, சீரகச் சம்பா, குடவாழை போன்ற அரிசி வகைகளோடு, கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற தானியங்கள் இருந்தன.
 சோனியாவிடம் நலம் விசாரிப்பு
 கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நலம் விசாரித்தார்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT