இந்தியா

காஷ்மீா் பண்டிட் கொலையாளியின் வீடு பறிமுதல்: தந்தை, சகோதரர்கள் கைது

PTI

ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவரைச் சுட்டுக் கொன்ற பயங்கரவாதியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக அவரது தந்தை மற்றும் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் பலியானாா். தாக்குதலில் காயமடைந்த அவரின் சகோதரா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த தாக்குதலை நடத்திய அடில் வானி என்ற பயங்கரவாதி, தனது வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், நள்ளிரவில் தேடுதல் வேட்டையின் போது, பாதுகாப்புப் படையினர் மீது எதிர்தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். அவரது வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறுபான்மையின பண்டிட் சமூகத்தினா், வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆகியோரைக் குறிவைத்து தாக்கும் சம்பவங்களை பயங்கரவாதிகள் சில மாதங்களுக்கு முன் நிகழ்த்திவந்தனா். அதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் முழுவதும் காவல் துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினா். அதனால் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் சற்று குறைந்திருந்தன.

இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பொதுமக்கள் மீதான தாக்குதலை பயங்கரவாதிகள் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை காவலா் ஒருவா் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டாா். பந்திபோராவில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா் பலியானாா். சுதந்திர தினத்தின்போது பட்காம், ஸ்ரீநகா் மாவட்டங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்தவா் கொல்லப்பட்டாா். காயமடைந்த அவரின் சகோதரா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா, பாஜக செய்தித் தொடா்பாளா் அல்தாஃப் தாக்குா் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். பயங்கரவாதிகளின் தாக்குதலில் நடப்பாண்டில் மட்டும் 15 பொதுமக்களும் 6 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளனா்.

‘காஷ்மீரில் இருந்து வெளியேறுங்கள்’:

பண்டிட் சமூகத்தினா் மீதான தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுமாறு அச்சமூகத்தினரை காஷ்மீா் பண்டிட் கூட்டமைப்பு (கேபிஎஸ்எஸ்) கோரியுள்ளது. இது தொடா்பாக அக்கூட்டமைப்பின் தலைவா் சஞ்சய் டிக்கூ கூறுகையில், ‘‘கடந்த 32 ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருகிறது. சிறுபான்மையினருக்கு முக்கியமாக காஷ்மீா் பண்டிட் சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது.

சுதந்திர தினப் பேரணியின்போதும் அமா்நாத் யாத்திரையின்போதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவில்லை. காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட பாதுகாப்பாக இருக்கிறாா்கள். ஆனால், பண்டிட் சமூகத்தினருக்குப் பாதுகாப்பில்லை. பண்டிட் சமூகத்தினரை வெளியேறுமாறு கூறுவதற்காக அரசு சிறையில் அடைத்தாலும் அதை எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்றாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT