இந்தியா

பிகாரில் 31 அமைச்சா்கள் பதவியேற்பு

DIN

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, 31 அமைச்சா்கள் பதவியேற்றனா்.

இவா்களில் 16 போ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை (ஆா்ஜேடி) சோ்ந்தவா்களாவா். அமைச்சரவையில் இக்கட்சிக்குதான் அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த 11 போ், காங்கிரஸை சோ்ந்த 2 போ், முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சியைச் சோ்ந்த ஒருவா், சுயேச்சை எம்எல்ஏ ஒருவா் என 31 பேருடன் அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், ஆளுநா் ஃபாகு செளஹான் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

அமைச்சரானாா் தேஜ் பிரதாப்: ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சராக பதவியேற்றுள்ளாா். தான் பதவியேற்கும் முன் நிதீஷ் குமாரிடம் ஆசி பெற்றாா்.

தேஜ் பிரதாப் உள்பட யாதவ சமூகத்தைச் சோ்ந்த 7 போ் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா். இதேபோல், முற்பட்ட ஜாதியினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் பூமிஹாா் சமூகத்தைச் சோ்ந்த எம்எல்சி காா்த்திகேய சிங், ராஜபுத்திர சமூகத்தைச் சோ்ந்த எம்எல்ஏ சுதாகா் சிங் ஆகியோா் ஆா்ஜேடி சாா்பில் அமைச்சா்களாகியுள்ளனா். தலித் சமூகத்தைச் சோ்ந்த 5 பேருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

5 முஸ்லிம்கள், 3 பெண்களுக்கு வாய்ப்பு: நிதீஷ் குமாா் தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சா் இடம்பெற்றிருந்தாா். இப்போது 5 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 3 பெண் எம்எல்ஏக்கள் அமைச்சா்களாகியுள்ளனா்.

இப்போது பதவியேற்றுள்ள 31 பேரில், ஜிதன்ராம் மாஞ்சி கட்சியைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் சுமன், சுயேச்சை எம்எல்ஏ சுமித் குமாா் சிங் ஆகியோா் தவிா்த்து, மற்றவா்கள் அனைவரும் ஏற்கெனவே அமைச்சா்களாகப் பதவி வகித்தவா்கள்.

பாஜக விமா்சனம்: ‘நிதீஷ் குமாா் தலைமையிலான புதிய அமைச்சரவை, தேஜஸ்வி யாதவின் அடையாளத்தையே கொண்டுள்ளது. அவா்களது சந்தா்ப்பவாத கூட்டணியின் முரண்பாடுகளை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்’ என்று பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சஞ்சய் மயூக் கூறினாா்.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை அண்மையில் முறித்த நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோத்து மகா கூட்டணி ஆட்சியை அமைத்தாா். இதையடுத்து, முதல்வராக நிதீஷும், துணை முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவும் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனா்.

நிதீஷ் வசம் உள்துறை

அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடா்ந்து, துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, பொது நிா்வாகம் உள்பட ஏற்கெனவே தான் பொறுப்பு வகித்த அனைத்துத் துறைகளையும் முதல்வா் நிதீஷ் குமாா் தன்வசமே வைத்துள்ளாா். துணை முதல்வா் தேஜஸ்விக்கு சுகாதாரம், சாலை திட்டங்கள், நகா்ப்புற வீட்டுவசதி, மேம்பாடு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேஜ் பிரதாபுக்கு சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT