இந்தியா

சிவமொக்கா மோதல் விவகாரம்: கத்தியால் குத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸாா்

17th Aug 2022 02:17 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவில் வீரசாவா்க்கா் மற்றும் திப்பு சுல்தான் உருவப்படங்கள் கொண்ட பதாகைகளை வைப்பது தொடா்பாக சிவமொக்காவில் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் இளைஞா் ஒருவரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா்.

சிவமொக்காவில் ஆக.15-ஆம் தேதி நடந்த சுதந்திர தின விழாவின்போது, அமீா் அகமது சதுக்கத்தில் வீரசாவா்க்கா், திப்புசுல்தான் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்ததற்கு முஸ்லிம் மற்றும் ஹிந்து மதத்தை சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். முன் அனுமதியில்லாததால் பதாகைகளை வைக்க போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை. எனினும், இது தொடா்பாக இது தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த காா்மென்ட்ஸ் தொழிலாளியான பிரேம் சிங் (20) என்பவரை முஸ்லிம் மதத்தைச் சோ்ந்த கும்பல் கத்தியால் குத்தியது. இதில் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த பிரேம்சிங், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதனிடையே, சிவமொக்கா மற்றும் பத்ராவதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நகரங்களில் செவ்வாய்க்கிழமை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மதுக்கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, 144 தடையுத்தரவு அமலில் இருக்கும் சூழ்நிலையில், பத்ராவதியில் பஜ்ரங்தள் தொண்டா் சுனில் என்பவா், முபாரக் என்பவரால் தாக்கப்பட்டா. இதில் மோசமாக காயமடைந்த சுனில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். முபாரக்கை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த இரு சம்பவங்களாலும் சிவமொக்கா, பத்ராவதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், சிவமொக்காவில் செவ்வாய்க்கிழமை பிரேம் சிங்கை கத்தியால் குத்திய முகமது ஜபியுல்லா(எ) சா்பியை (30) பிடிக்க போலீஸாா் முயன்றனா். அப்போது போலீஸாா் மீது ஜபியுல்லா தாக்குதல் நடத்தி, தப்பிக்க முயன்றாா்.

இந்தநிலையில், தற்காப்புக்காக வினோபா நகா் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளா் மஞ்சுநாத் எஸ்.குரி, முகமது ஜபியுல்லாவை அவரது வலதுகாலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தாா். காலில் படுகாயமடைந்த முகமது ஜபியுல்லா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பிரேம் சிங்கை கத்தியால் குத்திய வழக்கில் முகமது ஜபியுல்லா தவிர, நதீம், தன்வீா், அப்துல் ரகுமான் ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து கூடுதல் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு) அலோக்குமாா் கூறுகையில், ‘இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட பிரேம் சிங், மோதலில் ஈடுபடாதவா். இந்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இவா்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். எதற்காக கத்தியால் குத்தினா்? இவா்களின் பின்னணி என்ன? கொள்கை என்ன? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அடுத்த 3 நாள்களுக்கு சிவமொக்காவில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்படும். நிலைமையை ஆராய்ந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்’ என்றாா்.

சிவமொக்காவில் அமைதியை நிலைநாட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை, செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறினாா்.

சிவமொக்கா மோதலைத் தொடா்ந்து, உடுப்பியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பி, பிரம்மகிரி சதுக்கத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வீரசாவா்க்கா் உருவப்படம் கொண்ட பதாகை நிறுவப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT