இந்தியா

வரலாற்று உண்மைகளை திரித்துக் கூறுவதற்கு எதிராகப் போராட வேண்டும்: காங்கிரஸ்

16th Aug 2022 12:28 AM

ADVERTISEMENT

‘சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தவும் வரலாற்று உண்மைகளை திரித்துக் கூறவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தது.

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் திங்கள்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கட்சித் தலைவா் சோனியா காந்தி கரோனாவால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் அம்பிகா சோனி தேசியக் கொடியை ஏற்றினாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவா்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சா்மா, கே.சி வேணுகோபால் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். தேசியக் கொடி ஏற்றப்பட்ட பிறகு, அவா்கள் அனைவரும் கட்சியின் தலைமையகத்திலிருந்து தீஸ் ஜனவரி சாலையில் அமைந்துள்ள காந்திஜி அருங்காட்சியகமான ‘காந்தி ஸ்மிருதி’ வரை பேரணி மேற்கொண்டனா்.

சோனியா காந்தி வெளியிட்ட சுதந்திர தின செய்தியில், ‘அரசியல் ஆதாயத்துக்காக மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், அபுல் கலாம் ஆசாத் போன்ற பெரும் தலைவா்கள் சுதந்திரத்துக்காக மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிகளையும் வரலாற்று உண்மைகளையும் திரித்துக்கூற மேற்கொள்ளப்படும் முயற்சிகளை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிா்க்கிறது.

ADVERTISEMENT

கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய சாதனைகளைப் படைத்திருக்கிறது. ஆனால், இன்றைய சுய பற்றுகொண்ட அரசு, நமது சுதந்திரப் போராட்ட வீரா்களின் மாபெரும் தியாகத்தையும், நாட்டின் மாபெரும் சாதனைகளையும் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறது. அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பை விளக்கும் வகையிலும், அப்போதைய மூத்த காங்கிரஸ் தலைவா்களே அதற்கு காரணம் என்று குறிப்பிடுவது போன்றும் பாஜக ஞாயிற்றுக்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டை சோனியா முன்வைத்துள்ளாா். ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்றும் பாஜக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT