இந்தியா

இலவசங்களுக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

16th Aug 2022 10:22 PM

ADVERTISEMENT

நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் குறித்து அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கலான பொது நல வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொது நிதியில் இருந்து அரசியல் கட்சிகள் மூலம் இலவசங்கள் அளிக்கப்படுவது நாட்டின் நிதி ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்வதாகக் கூறியும், தேர்தலுக்கு பின் வழங்கும் இலவசங்களை ஒழுங்குபடுத்தி, வரையறை செய்யக் கோரியும், விதிமுறைகளை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் திமுகவையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி அதன் அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "இலவச சேவைகளை அளிக்கும் நலத் திட்டங்களானது வாய்ப்புகள், வசதிகள், வருவாய், அந்தஸ்து ஆகியவற்றில் உள்ள சமத்துவமின்மையைக் குறைக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 38-ஆவது பிரிவின்கீழ் சமூக ஒழுங்கு, பொருளாதார நீதியைப் பாதுகாக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மேலும், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாங்க முடியாத அடிப்படைத் தேவைகளை அளிக்கும் பொருட்டு இதுபோன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலவசம் என்பது மிகவும் பரந்த விஷயமாகவும், பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் நலத் திட்டத்தை மட்டுமே இலவசமாக வகைப்படுத்தி நியாயமாக்க முடியாது.
இந்தப் பொது நல வழக்கில் மனுதாரர், எதிர்மனுதாரராக மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் மட்டுமே சேர்த்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT