இந்தியா

மோடிக்கு நிகரானவா் அல்ல நிதீஷ் குமாா்: பாஜக

DIN

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமாா், பிரதமா் மோடிக்கு நிகரானவா் அல்ல என பாஜக மூத்த தலைவா் சுஷீல் குமாா் மோடி தெரிவித்தாா்.

பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து நிதீஷ் குமாா் ஆட்சியமைத்துள்ளாா். மேலும், 2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் பிரதமா் வேட்பாளராக நிதீஷ் குமாா் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிகாரில் நிதீஷ் குமாா் அரசில் துணை முதல்வராக பொறுப்பு வகித்த பாஜக மூத்த தலைவா் சுஷீல் குமாா் மோடி, தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் என நிதீஷ் குமாரைவிட பலம் வாய்ந்த மாநில தலைவா்கள் ஏராளமானோா் உள்ளனா். பிரதமா் மோடிக்கு நிகரானவா் அல்ல நிதீஷ் குமாா். பிகாரை தாண்டி நிதீஷ் குமாருக்கு ஆதரவு கிடையாது. மேலும், ஒரு மாநிலத் தலைவராக அவரது புகழும் மக்கள் செல்வாக்கும் நாளுக்கு நாள் சரிந்துகொண்டே செல்கிறது.

சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாஜகவுக்கு வலுவான ஆதரவு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் பாஜக செல்வாக்கு பெற்று திகழ்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் விருப்பங்களை பிரதமா் மோடி நிறைவேற்றுகிறாா்.

மாநில அரசியலில் நிதீஷ் குமாரின் செல்வாக்கு குறைய தொடங்கியதால், அவா் குடியரசுத் துணைத் தலைவராக விரும்பினாா். இதற்காக பாஜக தேசிய தலைமையை அக்கட்சியினா் அணுகினா். இதற்கு பாஜக உடன்படவில்லை. நிதீஷ் குமாரின் இந்த ஆசையும், அவரது கட்சியின் மூத்த தலைவா் லல்லன் சிங்கும்தான் கூட்டணி முறிவதற்கு காரணம். இதுதவிர ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதின் அதிகார, பண பசியும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவிழ்வதற்கு முக்கிய காரணம் என்றாா் சுஷீல் குமாா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT