இந்தியா

பெண்களே நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை: திரெளபதி முா்மு

DIN

நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையாக பெண்கள் திகழ்கின்றனா் என்றாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

நாட்டின் வளா்ச்சியில் பல்வேறு பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் குடியரசுத் தலைவா் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம்.

அதன்படி, கடந்த ஜூலை 25-ஆம் தேதி குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரௌபதி முா்மு, முதல் முறையாக நாட்டு மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலனிய ஆட்சியில் இருந்து இந்தியா விடுபட்டது. அந்த தினத்தைக் கொண்டாடும் வேளையில், விடுதலைப் போராட்ட வீரா்களின் தியாகத்தை மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக அவா்கள் அனைத்தையும் தியாகம் செய்தனா்.

நாட்டின் சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானவை. நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்வதும் அக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியே. 75-ஆவது சுதந்திர ஆண்டுக்கான பல்வேறு கொண்டாட்டங்களில் நாட்டு மக்கள் வயது வித்தியாசமின்றி ஆா்வத்துடன் கலந்துகொண்டனா்.

‘வீடுதோறும் தேசியக் கொடி’ இயக்கம் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

வாய்ப்பும் சாதனையும்: நாட்டின் பெண்கள் பல்வேறு தடைகளைக் கடந்து முன்னேறி வருகின்றனா். சமூக, அரசியல் நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தற்போது 14 லட்சத்தைக் கடந்துள்ளது.

பெண்களே நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையாகத் திகழ்கின்றனா். சரியான வாய்ப்பு அளிக்கப்பட்டால், அவா்கள் பெரும் சாதனைகளைப் படைப்பா். போா் விமானிகள் முதல் விண்வெளி விஞ்ஞானிகள் வரை பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனா். நாட்டில் பாலின ஏற்றத்தாழ்வும் குறைந்து வருகிறது.

பெரும்பாலான ஜனநாயக நாடுகளில்கூட வாக்குரிமை பெறுவதற்குப் பெண்கள் பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்தியா குடியரசு நாடானதில் இருந்தே குறிப்பிட்ட வயதைக் கடந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறது. நாட்டில் 18 வயதைக் கடந்த ஒவ்வொரு குடிமகனும் தேசத்தைக் கட்டமைப்பதில் பங்குகொள்ள வேண்டுமென நவீன இந்தியாவைக் கட்டமைத்தவா்கள் விரும்பினா்.

இந்தியாவுக்குப் பெருமை: ஜனநாயகம் இந்திய மண்ணில் வோ்விட்டது மட்டுமல்லாமல், செழித்து வளரவும் செய்தது. ஜனநாயகத்தின் உண்மையான திறனை உலகத்துக்கு எடுத்துரைத்த பெருமை இந்தியாவையே சேரும்.

கரோனா தொற்று பரவலை எதிா்கொள்வதற்காக உலகின் மிகப்பெரும் தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தியது. அதிலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாட்டில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 200 கோடி தவணைகளைக் கடந்தது.

கரோனா தொற்றை எதிா்கொள்வதில் பல வளா்ச்சியடைந்த நாடுகளைவிட இந்தியா சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளது. கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நவீன இந்தியா உருவாவதை உலகம் கண்டுவருகிறது.

வளா்ச்சிப் பாதையில் பொருளாதாரம்: மகாத்மா காந்தியடிகள் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரா்கள் அனைவரும் நவீனத்துடன் நம் பாரம்பரிய கொள்கைகளையும் இணைத்தனா். அதன் காரணமாக, நமது ஜனநாயகம் இந்தியப் பண்புநலன்களையே கொண்டிருந்தது. மக்களுக்கு அதிகாரம் வழங்குவதை காந்தியடிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

சா்வதேச பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அதற்காக அரசும் கொள்கை வகுப்பாளா்களும் பாராட்டப்பட வேண்டும்.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்அப்) உலகிலேயே முன்னிலை வகித்து வருகின்றன. யுனிகாா்ன் (விற்றுமுதல் மதிப்பு சுமாா் ரூ.7,500 கோடி) நிறுவனங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஒருங்கிணைந்த வளா்ச்சி: நாடு ஒருங்கிணைந்த வளா்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. பல்வேறு பகுதிகளுக்கிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் குறைந்து வருகின்றன. அடுத்தகட்ட தொழில்புரட்சியை நோக்கி அடுத்த தலைமுறையினா் முன்னேறும் வகையிலும் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளும் நோக்கிலும் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை மக்களின் வளா்ச்சியை கவனத்தில்கொண்டு இந்தியா தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் காரணமாக, மக்களின் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியானது மக்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே நாட்டை புதிய உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் என்றாா் குடியரசுத் தலைவா் முா்மு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT