இந்தியா

இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும்: பிரதமர் மோடி

15th Aug 2022 08:56 AM

ADVERTISEMENT

இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். செங்கோட்டையில் தொடர்ந்து 9ஆவது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி. அப்போது, 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்தினார். அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க நாளை கொண்டாடி வருகிறது. காந்தி, நேதாஜி, அம்பேத்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் நாள் இது. வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட தலைவர்களையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தியா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட மாபெரும் தலைவர்கள், விடுதலை போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொருவரின் தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். 

சுதந்திரத்துக்கு முதல் நாள் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது. ஜனநாயகத்தின் பிறப்பிடமாக இந்தியா விளங்குகிறது. நாட்டின் 76ஆவது சுதந்திர நாளை உலக முழுவதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பல்வேறு தடைகள் இருந்தாலும் அதனை தகர்த்து இந்தியா முன்னேறி வருகிறது. பழங்குடியினத்தைச் சேர்ந்த பலரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நமக்கு சரியான வாய்ப்பு கிட்டியுள்ளது. ஒருங்கிணைந்த உணர்வுதான் இந்தியாவின் பலம், புதிய இந்தியாவிற்கு இதுதான் அடிப்படை. நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் விரைவான வளர்ச்சி என உலகத்துக்கு எடுத்துக்காட்டியுள்ளோம். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

இதையும் படிக்க- அய்யம்பேட்டையில் பவள விழா காணும் காந்தி நிலையம்!

ADVERTISEMENT

உலக நாடுகள் தங்கள் பிரச்னையை இந்தியாவின் வழியில் தீர்வுகாண முயல்கிறது. சுதந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறது. கடுமையான பேராட்டத்தால் சுதந்திரம் பெற்று வளர்ச்சி பாதையில் நாட்டு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில்தான் என்பதை நாம் உலகத்திற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்தியா ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். 2047க்குள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நமது பாரம்பரியத்தின் மீது நாம் பெருமைப்பட வேண்டும். கர்வத்துடன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். 

நாட்டு மக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க வேண்டும். சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகும்போது நமது முக்கிய குறிக்கோள்களை அடைந்துகாட்ட வேண்டும். என்னுடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம். இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும். நமது குறிக்கோள்கள், எண்ணங்கள் பெரிதாக இருக்க வேண்டும். கனவுகளை நனவாக்கக் கூடிய காலம்இது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழி குறித்தும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியாவின் அடிமைத்தனத்தின் எந்த ஒரு அடையாளம் இருந்தாலும் அவை துடைத்தெறியப்பட வேண்டும். அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். இயற்கையை பாதுகாப்பது மற்றும் மகளிர் நலன் ஆகியவற்றில் இந்திய கலாசாரம் முன்னணி வகிக்கிறது என்றார். 

சுதந்திர நாள் விழாவையொட்டி செங்கோட்டையில் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், முப்படைத் தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 5 கி.மீ. சுற்றளவுக்கு வான் பகுதியில் பட்டம், ட்ரோன் போன்றவை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுதந்திர நாளையொட்டி தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT